யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-02-05

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58:7-10,திருப்பாடல் 112: 4-5. 6-7. 8- 9 ,திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5 ,புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 5:13-16)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம். இன்றைய வாசகங்கள் நம்மைச் சுவையுள்ளவர்களாகவும், அனைவருக்கும் ஒளியாகவும் இருக்க அழைக்கின்றது.

இன்று திருமகன் இயேசு நம் திருமுழுக்கினால் நாம் பெற்ற உயர் நிலையை நமக்குச் சுட்டிக் காட்டி அதன்வழியாக சிறப்புமிக்க ஒரு செயல்பாட்டிற்கு நம்மை அழைக்கிறார். ஆண்டவர் நம்மை உப்பு என்கிறார். ‘நீங்கள் உலகிற்கு உப்பு’ என்ற சொல்லில் மறைந்துள்ள பொருள் மிக உயரியது. உப்பு உணவிற்கு சுவை கொடுப்பது அத்துடன் பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க உதவுகிறது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழியை நினைவிற் கொள்ளுங்கள். உணவுப்பண்டங்களுக்கு உப்பு மிகவே இன்றியமையாதது என்பதற்காக யாரும் உப்பை அள்ளி வாயில் போடுவதில்லை. தெரியாமல் வாயிலிட்டால்கூட ‘தூ’ எனத் துப்பிவிடுகிறோம். தனியாக உண்ண ஆகாத பொருள் அது. அதே வேளையில் போதிய உப்பில்லாத உணவு சுவைப்பதில்லை. இந்நிலையிற்தான் நாமிருக்க இயேசு நம்மை அழைக்கிறார். எந்தச் சூழலிலும் நாம் நம்மை முன்னிலைப்படுத்தாது பிறர் நம்மால் சிறப்படைய நாம் பயன்படவேண்டும் என இயேசு குறிப்பிடுகிறார். ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள் செய்யவேண்டியதைத்தான் செய்தோம்’. என பாராட்டுப்பெறும் நிலையிலிருக்கும்போது கூறவேண்டும் என இயேசு சொல்லிக்கொடுத்ததை இந்த இடத்தில் நினைவிற் கொள்வோம். நற்செயல்களால் கடவுளுடன் இணைந்திடுவோம். இவரின் ஞானத்தையும், வல்லமையையும் பெற்றிட இத்திருப்பலியில் உப்பாய், ஒளியாய் கலந்திடுவோம் வாரீர்.



முதல் வாசகம்

வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58:7-10

ஆண்டவர் கூறுவது: பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்: அவர் உனக்குப் பதிலளிப்பார்: நீ கூக்குரல் இடுவாய்: அவர் "இதோ! நான் " என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்: இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.
திருப்பாடல் 112: 4-5. 6-7. 8- 9

4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். 7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி

8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; 9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே.
திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5

சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 5:13-16

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியது: "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்: வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை: மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணியாற்ற அழைப்பவரே இறைவா,

உம் திருச்சபையைத் தயவாய் கண்ணோக்கி, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் உலகின் மீட்புக்குத் தெளிவான அடையாளமாக உலகின் உப்பாகவும், ஒளியாகவும் எமது நற்செயல்களால் மற்றவர்களுக்கு உம் சாட்சிகளாக அமைத்தருள உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா,

எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்பை நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும், திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும், ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில் வாழ்ந்தோருக்கு ஒளியைக் கொண்டுவந்ததபோல, எனது வாழ்வும், பணியும் அமைய என்னை வலிமைப்படுத்தியருள உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

பல்வேறு காரணங்களால் இன்றைய இத்திருப்பலியில் பங்குகொள்ள முடியாதிருப்போர், நோயுற்றிருப்போர், வேதனைகளுக்குள் வாழ்வோர், சிறையிலிருப்போர், பணயக் கைதிகளாயிருப்போர் அனைவரும் நீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் பெற்று மகிழ அருள் கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருக்காட்சி நிகழ்வின் வழியாக உம் அன்பை எல்லா மக்களக்கும் வெளிப்படுத்திய இறைவா!

கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்றும், புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 5:13-14)

''மலைப் பொழிவு'' என்னும் பகுதி மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இயேசு ஆற்றிய ஐந்து பெரிய போதனைப் பகுதிகளில் முதலாவதாகும் (அதி. 5-7). எஞ்சிய நான்கும் முறையே திருத்தூதுப் பொழிவு (அதி. 10), உவமைப் பொழிவு (அதி. 13), திருச்சபைப் பொழிவு (அதி. 18), நிறைவுகாலப் பொழிவு (அதி. 24-25) என அழைக்கப்படுகின்றன. இயேசு கடவுளாட்சி பற்றி வழங்கிய போதனைகளை மத்தேயு இவ்வாறு தொகுத்து வழங்கியுள்ளார். மலைப் பொழிவின்போது இயேசு தம் சீடரை நோக்கி, ''நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு...நீங்கள் உலகிற்கு ஒளி'' (மத் 5:13-14) என்று கூறுகிறார். ''உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கிறது. பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும், தூய்மையாய் இருக்கவும் உப்பு பயன்படுகிறது (காண்க: யோபு 6:6; சிஞா 39:26; 2 அர 2:19-22). இஸ்ரயேல் மக்கள் நடுவே உடன்படிக்கை செய்யப்பட்டபோது உப்பு பயன்பட்டது (எண் 18:19; 2 குறி 13:5). வழிபாட்டின்போதும் உப்பு இடம்பெற்றது (விப 30:35; லேவி 2:13; எசே 43:24; எஸ் 4:14; திப 1:4). நிலம் செழிப்பாக இருக்க உப்பு அதில் உப்பு இருக்க வேண்டும். இயேசு உப்பு என்னும் உருவகத்தை எப்பொருளில் பயன்படுத்தினார்? சீடர்கள் உப்பைப் போல இந்த உலகிற்குச் சுவை கூட்ட வேண்டும். இவ்வாறு மக்கள் கடவுளின் அன்பைச் சுவைக்க முடியும். சீடர்கள் இவ்வுலகைத் தூய்மைப்படுத்தி, அது கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டும். உப்பு தன் காரத்தை இழந்துவிடக் கூடாது. அதுபோல சீடர்களும் துன்பங்களுக்கு நடுவே தங்கள் உள உறுதியை இழந்துவிடலாகாது (மத் 5:11-12).

சீடர்கள் ''உலகுக்கு ஒளி'' என இயேசு கூறுகிறார் (மத் 5:14). உரோமைப் பேரரசு தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய காலத்தில் உரோமை நகரம் ''உலகின் ஒளி'' என்று போற்றப்பட்டது. ஆனால் இயேசு தம் சீடர்கள் ஏழையரின் உள்ளத்தவராய், இரக்கப் பண்பு நிறைந்தவராய், பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்று போதிக்கிறார். இத்தகைய ஒளி பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும்; பிறரை அடக்கி ஆளுகின்ற போக்கு அங்கே இராது. இவ்வாறு, இயேசு தம் சீடர்கள் ''உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும்'' இருக்கும்படி அழைக்கிறார். உப்பும் ஒளியும் பிறருக்குப் பயன்படுகின்றன. உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு உணவுக்குச் சுவையூட்டும், ஆனால் தன்னையே கரைத்துவிடும். அதுபோல, விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது. இவ்வாறு சீடர்களும் தாங்கள் புரிகின்ற நற்செயல்கள் வழியாகக் கடவுளுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமே ஒழிய, தம்மையே முன்னிறுத்தக் கூடாது. இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்கள் இன்றைய உலகம் கடவுளின் அன்பைச் சுவைக்க உதவுகின்ற ''உப்பாக'' மாற வேண்டும்; உலக மக்கள் கடவுளை நோக்கி நடந்து செல்ல வழிகாட்டுகின்ற ''ஒளியாக'' விளங்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஒளியால் நாங்களும் ஒளிர்ந்திட அருள்தாரும்.