யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2023-01-30
முதல் வாசகம்

நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே, கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள். பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக
திபா 31: 19-20. 20b 21. 22. 23 (

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! 20ய மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! பல்லவி

20b நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி

21 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். பல்லவி

22 நானோ, கலக்கமுற்ற நிலையில் `உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். பல்லவி

23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார். அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ``இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்'' என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், ``தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ'' என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், ``உம் பெயர் என்ன?'' என்று கேட்க அவர், ``என் பெயர் `இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்'' என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. ``நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்'' என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, ``உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்'' என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்றார்" (லூக்கா 4:24)

கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தவர்கள் இறைவாக்கினர். சில வேளைகளில் இறைவாக்கினர் என்றால் வருங்கால நிகழ்வுகளை முன்னறிவிக்கின்றவர்கள் எனப் பொருள்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் பழைய ஏற்பாட்டில் வருகின்ற மோசே, எசாயா, எசேக்கியேல், எரேமியா போன்றோர் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை மட்டுமே அறிவிக்கவில்லை; அவர்கள் மக்களையும் ஆட்சியாளர்களையும் கண்டித்துப் பேசியதுண்டு; தம் தீய நடத்தையை விட்டுவிட்டு கடவுளை நோக்கித் திரும்பவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியதுண்டு. மேலும் இறைவாக்கினர்கள் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பதையும் அறிவித்தார்கள். ஆனால் உண்மையான மன மாற்றம் நிகழாவிட்டால் மக்கள் அழிந்தொழிவார்கள் என்னும் செய்தியையும் இறைவாக்கினர் அறிவித்தனர். இதனால் இறைவாக்கினரை எல்லாரும் எப்போதும் வரவேற்றார்கள் என்று சொல்ல முடியாது.

மக்களுக்குப் பிடிக்காத உண்மைகளையும் கசப்பான எதார்த்தங்களையும் இறைவாக்கினர் துணிந்து அறிவித்ததால் அவர்களுடையே உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நேரங்களும் உண்டு. எனவே, இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்று கூறிய சொற்கள் அவருடைய வாழ்க்கையிலேயே உண்மையாயின. இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டு, அவர் அறிவித்த இறையாட்சிச் செய்தியைக் கேட்டு மக்கள் எல்லாரும் உடனே அவரை வரவேற்று ஏற்கவில்லை. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிப் பல விவரங்கள் தெரிந்திருந்ததால் அவரைப் பற்றி மேலும் அறிய முன்வரவில்லை. நம் வாழ்க்கையிலும் இது நிகழக் கூடும். இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் ஏற்கெனவே விடை கண்டுவிட்டதாக நினைத்தால் இயேசுவோடு நமக்குள்ள உறவு ஆழப்படுவதற்கு வழியில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இயேசுவைப் புதிதாக அறிகின்ற மனம் நமக்கு இருந்தால் அவரது சாயல் நம்மில் மேலும் தெளிவாகத் தெரிந்திட வழிபிறக்கும். எனவே, இயேசு என்னும் இறைவாக்கினரின் குரல் நம் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அக்குரலுக்கு நாம் செவிமடுத்து அவரைத் தயக்கமின்றிப் பின்தொடர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை நாளும் அதிகமாக அறிந்திட எங்கள் உள்ளத்தை ஒளிர்வித்தருளும்.