யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2023-01-21




முதல் வாசகம்

இயேசு, தம் சொந்த இரத்தத்தைக் கொண்டு, எக்காலத்திற்குமே ஒரே முறையில் தூயகத்திற்குள் நுழைந்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3, 11-14

சகோதரர் சகோதரிகளே, திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் ‘தூயகம்’ என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், “திருத்தூயகம்” என்னும் கூடாரம் இருந்தது. ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று இயேசுவின் உறவினர் பேசிக்கொண்டனர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

அக்காலத்தில்,இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இருவர் இருவராக !

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்ற அனுப்பினார் என்னும் செய்தியை இன்றைய சிந்தனைக்குக் கருவாக எடுத்துக்கொள்வோம். ஏன் இயேசு தம் சீடரை இருவர் இருவராக அனுப்பினார்?

இணைந்து பணியாற்றும் பண்பைக் கற்றுக்கொள்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது:. இறையாட்சிப் பணி என்பது தனி நபரி;ன் பணி அல்ல. அது ஒரு கூட்டுப் பணி. தனி நபர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைவிட, குழுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்பது நாம் அறிந்ததே. எனவே, தனி நபரின் திறன்களிலும், ஆற்றலிலும் மட்டும் நம்பிக்கை வைக்காமல், அடுத்தவரது திறன்களையும் பயன்படுத்துகின்ற பொதுமைப் பண்பை இணைந்து பணியாற்றுதல் கற்றுத் தருகிறது. மேலும், இருவர் இருவராகச் சென்று பணியாற்றும்போது, தனிமை, மன உளைச்சல், பாதுகாப்பின்மை, வழிகாட்டுதல் இன்மை போன்ற சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இருவராகப் பணியாற்றுவது உளவியல் பாதுகாப்பு தருகிறது. எனவேதான், இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார் என்று எடுத்துக்கொள்ளலாம். நாமும் இணைந்து பணியாற்றும் கலையில் வளர்வோம்.

மன்றாட்டு:

ஒருமைப்பாட்டின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் எங்கள் வாழ்விலும், பணியிலும் தனியே செயல்படாமல், இணைந்து பணியாற்றும் பண்பில் வளர உமது தூய ஆவியைத் தந்தருளும்.