யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2023-01-18
முதல் வாசகம்

மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7:1-3,15-17

1 இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்: உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார்.2 ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள்.3 இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை: தலைமுறை வரலாறு இல்லை: இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை: முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.15 மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.16 இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார்.17 இவரைப் பற்றி, மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
திருப்பாடல்கள் 110:1,2,3-4

1 ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். 4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.


நற்செய்திக்கு முன் வசனம்

ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:1-6

1 அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.2 சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.3 இயேசு கை சூம்பிவரை நோக்கி, ' எழுந்து, நடுவே நில்லும் ' என்றார்.4 பின்பு அவர்களிடம், ' ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.5 அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ' கையை நீட்டும் ' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.6 உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே' என்றார்'' (லூக்கா 6:5)

ஓய்வு நாள் என்பது யூதருடைய சமய வழக்கங்களில் மிக முக்கியமான ஒன்று. வெள்ளிக் கிழமை மாலை பொழுது சாயும் வேளையிலிருந்து தொடங்கி மறுநாள் சனிக்கிழமை பொழுது சாய்வது வரை ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆறு நாள்களில் உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்னும் விவிலியச் செய்தியின் அடிப்படையில் ஓய்வுநாள் சட்டம் விளக்கப்பட்டது. கடவுளின் படைப்பை வியந்து, நன்றியுணர்வோடு கடவுளுக்குப் புகழ்செலுத்தும் நாளாக ஓய்வுநாள் அமைந்தது. அன்றாட வேலையிலிருந்து ஓய்வெடுப்பதற்கும் அந்நாள் பொருத்தமாக இருந்தது. என்றாலும் யூத சமயத் தலைவர்கள் ஓய்வுநாள் கட்டளைக்கு அளித்த விளக்கங்கள் மக்கள்மேல் திணித்த ஒரு பெரிய சுமையாக மாறிவிட்டிருந்தது. சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் புதுப்புது விளக்கங்களைத் தந்து இறுதியில் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். சட்டம் மனிதருக்கா மனிதர் சட்டத்திற்கா என்று கேட்டால் அவர்கள் மனிதர் சட்டத்திற்காகவே என்று பதிலளித்திருப்பர். ஆனால், இயேசுவின் அணுகுமுறை யூத அறிஞரின் அணுகுமுறைக்கு நேர்மாறாக அமைந்தது. மனிதத் தேவைகள் எழும்போது சட்டம் அடிபணிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக மாறிவிடலாகாது.

ஓய்வு நாளில் இயேசுவின் சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றது சட்டத்திற்கு மாறானதல்ல (காண்க: இச 23:25). ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று அவ்வாறு செய்தது சரியல்ல என இயேசுவின் எதிரிகள் வாதாடினர். இயேசு அவர்களோடு வாதத்தில் ஈடுபட மறுத்துவிட்டார். மாறாக, பசியாய் இருந்தபோது தாவீதும் அவரோடு இருந்தவர்களும் ''அர்ப்பண அப்பங்களை'' எடுத்து உண்டது எப்படி சட்டத்திற்கு எதிராக அமையவில்லையோ அதுபோலவே, பசியாயிருந்த சீடர் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தானியத்தை உண்டது சட்டத்தை மீறியதாகாது என இயேசு போதித்தார். மக்களின் வாழ்வுக்காக இயேசுவே ''அர்ப்பண அப்பமாக'', நற்கருணையாக மாறினார்; தம்மையே நமக்கு உணவாக அளித்தார் என்பதையும் நாம் இவண் நினைவுகூரலாம். ஓய்வுநாள் என்றால் என்னவென்று விளக்குவதற்கு இயேசு அதிகாரம் கொண்டிருந்தார் என்னும் செய்தி அவருடைய எதிரிகளுக்குப் பெரும் வியப்பைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனைப்படி, சட்டம் மனிதருக்குப் பணிபுரிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற எசமானனாக மாறிவிடலாகாது. சிலர் சட்டத்தின் பெயரால் அநீதி இழைக்கத் தயங்கமாட்டார்கள். பிறருக்கு என்ன நிகழ்ந்தாலும் சரி, சட்டம் மட்டும் மீறப்படலாகாது என்பது அவர்களுடைய பார்வை. ஆனால் இயேசுவின் பார்வை அதுவல்ல. அவர் மனிதருக்கே முதன்மை அளித்தார். எதுவெல்லாம் மனித நலனுக்குத் தடையாக அமைகிறதோ அதைத் தகர்த்து எறிய வேண்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை.

மன்றாட்டு:

இறைவா, மனித நலனை எப்போதும் முன்னிலைப்படுத்தி உமது புகழைப் பாடிட எங்களுக்கு அருள்தாரும்.