திருவழிபாடு ஆண்டு - A 2023-01-15
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3.5-6
,திருப்பாடல் 40: 1,3. 6- 9,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3
,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
)
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரத்தில் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் இறை அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்தைக்கூறி மகிழ்கிறேன். இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். நம் பக்கம் சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும் நம் ஆண்டவர் இயேசுவின் சந்நிதானத்தில் பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம். உலகம் முழுவதும் அவருடைய மீட்பை அடைவதற்கு நம்மைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் எனக் கூறுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள நம்மிடம், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையடும் பொறுப்பை ஒப்படைக்கின்றார். பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் அவர் கேட்கவில்லை: நம்முடைய தூய்மையான வாழ்வையும், பணி வாழ்வையுமே அவர் விரும்புகின்றார். எனவே நாம் அனைவரும் உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது, உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன். என்னும் இலட்சிய தாகத்தை இதயத்தில் சுமந்து சென்று இறைவனை மகிமைப்படுத்துவோம், இறைவனின் சாட்சிகளாய் வாழ்வோம்.
முதல் வாசகம்
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3.5-6
ஆண்டவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40: 1,3. 6- 9
1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
3யb புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். -பல்லவி
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;
எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை;
ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7ய எனவே, `இதோ வருகின்றேன்.' -பல்லவி
7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி
9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்;
நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை;
ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி
இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3
கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ``இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்'' என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ``தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வழிகாட்டும் நாயகனே எம் இறைவா!
மீட்பரைக் காண ஆவலோடு பயணத்தை மேற்கொண்ட மூன்று அரசர்களுக்கு விண்மீன் வழிகாட்டியது போல, உம் திருமகனை முழுமையாக அறிந்து, அவரின் சீடாகளாக வாழத்துடிக்கும் எங்களுக்கு நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் தங்கள் சொல், செயல் மற்றும் வாழ்வு வழியாக இயேசுவை நோக்கிய எமது பயணத்தில் விண்மீன்களாய்ச் செயல்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே! எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும். இந்த நவீன உலகில் எங்களது நம்பிக்கையானது குறைந்து கொண்டே செல்கிறது. எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நாங்கள் உம்மையே சார்ந்து, உம்மேல் முழுநம்பிக்கையுடன் வாழ நீர் தான் உறுதணையாய் இருக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே! பல்வேறு காரணங்களால் இன்றைய இத்திருப்பலியில் பங்குகொள்ள முடியாதிருப்போர், நோயுற்றிருப்போர், வேதனைகளுக்குள் வாழ்வோர், சிறையிலிருப்போர், பணயக் கைதிகளாயிருப்போர் அனைவரும் நீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் பெற்று மகிழ அருள் கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
திருக்காட்சி நிகழ்வின் வழியாக உம் அன்பை எல்லா மக்களக்கும் வெளிப்படுத்திய இறைவா! கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்றும், புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!
ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்...' என்றார்'' (யோவான் 1:29)
இயேசு யார் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதத்தில் சான்றுபகர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவ்வாறு சான்று பகர்ந்தவர்களில் மிகச் சிறந்தவர் திருமுழுக்கு யோவான் என்றால் மிகையாகாது, யோவான் இயேசு யார் என்பதைப் பல உருவகங்கள் வழியாக விளக்கினார். அவற்றுள் ஒன்றுதான் ''ஆட்டுக்குட்டி'' என்பதாகும். இதன் பொருள் என்ன? கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அக்கால மக்கள் நடுவே ''ஆட்டுக்குட்டி'' என்பதற்கு ''அன்பார்ந்த குழந்தை'' என்றொரு பொருள் உண்டு. நாம் ''செல்லப் பிள்ளை'' என்பது இதைப் போன்றதுதான். இயேசு உண்மையிலேயே கடவுளின் அன்பார்ந்த மகன் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. ஆட்டுக்குட்டி யூதர்கள் நடுவே இன்னொரு சிறப்புப் பொருளையும் கொண்டிருந்தது. அதாவது, கோவிலில் பலி செலுத்துவதற்காகப் பயன்பட்ட சிறந்த பலிப்பொருள் ஆட்டுக்குட்டி. இயேசு இப்பெயரால் அழைக்கப்படுவது அவர் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார் என்பதைக் குறிக்கிறது.
ஆட்டுக்குட்டி பலியாக்கப்படுவது கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பை இறைஞ்சுவதற்காக. எனவே, இயேசு என்னும் ஆட்டுக்குட்டி பாவங்களைப் போக்குபவர் ஆவர். ஆக, யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதன் மூலம் இயேசு ஆற்றவிருந்த பணியைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிவிட்டார்.
மன்றாட்டு:
இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.
|