யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-01-08

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6,திருப்பாடல் 72: 1-2. 7-8. 10-11. 12-13, திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, அனைவருக்கும் திருக்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன். உலக மக்களை மீட்க இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து வந்ததை உலக மக்களுக்கு அறிவிக்க இறைவன் ஓர் அருமையான ஏற்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். அதைத்தான் திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடுகிறோம்.

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கிழக்கத்திய ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். குழந்தை இயேசுவின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின் அரசராம் இறைவனே, மனிதராக பிறந்திருப்பதை அறிந்து அவருக்கு பொன்னும், சாம்பி ராணியும், வெள்ளைப்போளமும் காணிக்கையாக அளிக்கிறார்கள். அந்த ஞானிகளைப் போன்றே, நாமும் அனைத்துக்கும் மேலாக ஆண்டவருக்கு பணிவிடை செய்யும் மன நிலையைப் பெற்று வாழும் வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2. 7-8. 10-11. 12-13

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி 7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வழிகாட்டும் நாயகனே எம் இறைவா!

மீட்பரைக் காண ஆவலோடு பயணத்தை மேற்கொண்ட மூன்று அரசர்களுக்கு விண்மீன் வழிகாட்டியது போல, உம் திருமகனை முழுமையாக அறிந்து, அவரின் சீடாகளாக வாழத்துடிக்கும் எங்களுக்கு நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் தங்கள் சொல், செயல் மற்றும் வாழ்வு வழியாக இயேசுவை நோக்கிய எமது பயணத்தில் விண்மீன்களாய்ச் செயல்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே,

இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும். இந்த நவீன உலகில் எங்களது நம்பிக்கையானது குறைந்து கொண்டே செல்கிறது. எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நாங்கள் உம்மையே சார்ந்து, உம்மேல் முழுநம்பிக்கையுடன் வாழ நீர் தான் உறுதணையாய் இருக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

பல்வேறு காரணங்களால் இன்றைய இத்திருப்பலியில் பங்குகொள்ள முடியாதிருப்போர், நோயுற்றிருப்போர், வேதனைகளுக்குள் வாழ்வோர், சிறையிலிருப்போர், பணயக் கைதிகளாயிருப்போர் அனைவரும் நீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் பெற்று மகிழ அருள் கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருக்காட்சி நிகழ்வின் வழியாக உம் அன்பை எல்லா மக்களக்கும் வெளிப்படுத்திய இறைவா!

கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்றும், புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2)

கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.