யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்துபிறப்புக்காலம்
2023-01-06
முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக
திபா 147: 12-13. 14-15. 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி 14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி 19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறை சாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

-"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?"-

"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்பது கேள்வி அல்ல. அது பதில். எதுவுமே வராது என்பதுதான் அதில் அடங்கியிருப்பது. இந்த மாதிரி கேள்விகளில் பதிலை உள்ளடக்கி பேசும்போது அந்த நகரை, ஆட்களை, நிகழ்ச்சிகளை அலட்ச்சியப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் இயேசு இவ்வாறு அலட்ச்சியப்படுத்தப்படும் அல்லது அவமானப்படுத்தப்படும் ஊர்களையும் மனிதர்களையும் உயர்த்துகிறார், மேன்மைப்படுத்துகிறார். கர்வம் கொண்ட மனிதரையும் நகர்களையும் தரை மட்டும் தாழ்த்துகிறார். "பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!" (மீக்கா 5 :2) இவ்வாறு பெத்லகேம் கணிக்கப்பட்டது. ஆனால் இயேசு தன் பிறப்பால், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை"(மத் 2'6); என்று உயர்த்தினார். நம் அன்;னை மரியாள் அறிமுகம் இல்லாது தாழ்நிலை நின்ற தன்னை எல்லாத் தலைமுறையும் போற்று பேருடையாள் என உயர்த்திதை மறக்க முடியாது. இவ்வாறு இறை வல்லமையால் சிறியதும் தாழ்ந்தவைகளும் அற்பமானதும் உயர்த்தப்படும்போது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற ஐயத்திற்கு இடமே இல்லை. அதுபோல நாமும் முகவரி இல்லாதவர்களாக இருந்தாலும் இறை அருளோடு ஒத்துழைத்தால் பெரியவற்றைச் சாதிக்க முடியும். சாதியுங்கள்.

மன்றாட்டு:

நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மறைநுhலின்படியும், இறைத்தந்தையின் விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி செய்தீர். உம்மைப் போல நாங்களும் இறைவார்த்தையின்படி வாழ, சாட்சிகளாய் மாற அருள்தாரும். ஆமென்.