யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2023-01-05
முதல் வாசகம்

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம்.
யோவான் முதல் திருமுகம் 3:11- 21

11 நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே: நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.12 காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்: அவன் தியோனைச் சார்ந்தவன்: ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.13 சகோதர சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம்.14 நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்: அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர்.15 தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.16 கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.17 உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் ககோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?18 பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.19 இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்: நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும்.20 ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்: அனைத்தையும் அறிபவர்.21 அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்
திருப்பாடல்கள் 100:1-5

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.


நற்செய்திக்கு முன் வசனம்

நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:43-51

43 மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, ' என்னைப் பின்தொடர்ந்து வா ' எனக் கூறினார்.44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள். 45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, ' இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர் ' என்றார்.46 அதற்கு நத்தனியேல், ' நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? ' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், ' வந்து பாரும் ' என்று கூறினார்.47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ' இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் ' என்று அவரைக் குறித்துக் கூறினார்.48 நத்தனியேல், ' என்னை உமக்கு எப்படித் தெரியும்? ' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ' பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன் ' என்று பதிலளித்தார். 49 நத்தனியேல் அவரைப் பார்த்து, ' ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர் ' என்றார்.50 அதற்கு இயேசு, ' உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர் ' என்றார்.51 மேலும், ' வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"நாசரேத்திலிருந்து நல்லது வரக்கூடுமோ" ?

நத்தனியேல் பிலிப்பிடம் சொன்ன "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" என்னும் சொற்கள் நமது முற்சார்பு எண்ணங்களை ஆய்வுசெய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன. "இந்த ஊர்க்காரர்கள் இப்படிப்பட்டவர்கள்", "இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகள்", "இந்த மொழியைப் பேசுபவர்கள் ஆதிக்கவாதிகள்" என்றெல்லாம் ஒரு பட்டியலை உருவாக்கி, அதைத் தலைமுறை தலைமுறையாகப் பரப்பி வருகின்றனர் ஒருசிலர். நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த முற்சார்புப் பதாகைகளைக் கேள்விக்குட்படுத்தாமல், அப்படியே ஏற்றுக்கொள்வதுடன், அதை நமது பங்குக்கு நாமும் பரப்புரை செய்கின்றோம். எவ்வளவு பெரிய தவறு! எவருடைய தவறுக்கும், உயர்வுக்கும் அவரது ஊரோ, மொழியோ, மதமோ, சாதியோ பொறுப்பல்ல. அவரவரே பொறுப்பு என்னும் அறிவார்ந்த சிந்தனையை எப்போது நாம் ஏற்றுக்கொள்வோம். நாசரேத்திலிருந்தும் நல்லது வரக்கூடும் என்று அந்த பிற்போக்கு எண்ணத்தைத் தகர்த்தெறிந்த ஆண்டவர் இயேசு, நமது முற்சார்பு மூடநம்பிக்கைகளை உடைத்து, மனிதரை மாண்புடன் எதிர்கொள்ள அருள்தருவாராக!

மன்றாட்டு:

ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எந்த மனிதரையும் ஊரின், சாதியின், சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உமது சாயலாகப் பார்க்கின்ற புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.