யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2022-12-18

(இன்றைய வாசகங்கள்: எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 7:10-14,திருப்பாடல்24;1-6,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 1:1-7, புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 1:18-24)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்பு இறைவன் மாந்தரை மீட்க மானிடராய் வந்ததைக் கொண்டாட ஆவலுடன் அணியமாகிக்கொண்டிருக்கும் அன்புச் சகோதர சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களை முன்னதாகவே உரியதாக்குகிறேன்.

இன்று திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு. இம்மானுவேல் என்னும் பெயரைத்தாங்கி என்றும் நம்மோடு இருக்கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம். இன்று நாம் வாசிக்கக்கேட்கும் இறைச் செய்திகளில் ஆண்டவரின் பிறப்பிடம் நமக்கு முன்னுணர்த்தப்படுவது குறிப்பிடப்படுகிறது. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது என்னும் மிக மிக முக்கியமான செய்தியினை இன்றைய இறைவார்த்தைகள் வழியாக இறைவன் வெளிப்படுத்துகின்றார். அத்தோடு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாம் பல்வேறு பணிகள் செய்வதற்குரிய பல்வேறு வகையான அருட்கொடைகளையும், ஆற்றல்களையும் பெற்றுக்கொண்டோம் என்னும் உண்மையையும் இறைவார்த்தைகள் உணர்த்தி நிற்கின்றன. எனவே, கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், இறைவனுடைய திருவுளத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு, இறைவனின் பொறுமைக்கெதிராகச் செயற்படாது, மனமாற்றம் பெற்று புதிய சமுதாயமாக வாழ வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 7:10-14

அந்நாட்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்: அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும் " என்றார். அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட."டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன் " என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
திருப்பாடல்24;1-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.பல்லவி

2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?பல்லவி

4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். பல்லவி

6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே .பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 1:1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்: தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள். நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 1:18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் " என்றார். " இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் " என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன." இம்மானுவேல் என்றால் "கடவுள் நம்முடன் இருக்கிறார் " என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார் .

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

விழித்திருக்க அழைப்பவரே இறைவா,

உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகை விழிப்புடன் தயார் செய்யும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா!

இறந்து போன அனைத்து ஆத்மங்களையும் உமது இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். அவர்கள் குற்றங்களை பொறுத்து அல்ல, மாறாக உமது பேரன்பிற்கேற்ப இரக்கம் வைத்தருளும். இதனால் அவர்கள் அனைவரும் உமது வான்வீட்டை அடைந்து, உமது அன்பு பிரசன்னத்தில் இளைபாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வல்லமை தருபவரே இறைவா,

எங்கள் ஊரை நிறைவாக ஆசீர்வதியும், அனைவரும் உடல் உள்ள சுகம் பெற்று, எங்கள் கடைமைகளை சரிசரச் செய்யவும், ஒற்றுமையுடன் தொடர்ந்து வாழவும், செய்கின்ற தொழில்களில் வெற்றி காணவும், எமது பங்கின் வளர்ச்சியில் பங்குதந்தையுடன் முழுமையாக ஒத்துழைக்கவும், எடுத்துகாட்டான மக்களாக வாழவும் அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உதவி செய்பவரே இறைவா,

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்'' (மத்தேயு 1:18)

மரியாவுக்குக் கடவுள் அளித்த மாபெரும் மாண்பு அவரைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டது ஆகும். கடவுளின் தாயாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட மரியாவைக் கடவுள் தொடக்கத்திலிருந்தே பாவத்திற்கு உட்படாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. மரியாவைக் கடவுளுக்கு நிகராக நாம் கருதுவதில்லை. ஆனால், கடவுளின் படைப்பாக இருந்தாலும் மரியா மனித மீட்பு வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளதால் அவருக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்பது தெளிவு. மரியா கடவுளை முழுமையாக நம்பினார். கடவுளும் மரியாவைத் தம் வல்லமையால் நிரப்பினார். கடவுளின் செயலால் மரியா பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதோடு கடவுளின் மகனாகிய இயேசுவையும் கன்னிமை குன்றாமல் கருத்தரித்தது இறைவனின் வியத்தகு செயலே. மரியாவின் வாழ்வில் கடவுள் புரிந்த அரும்செயலை யோசேப்பு முதலில் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கடவுளின் திட்டம் என்னவென்று அவர் உணரத் தொடங்கியதும் மரியாவைத் தம் மனைவியாக ஏற்றுக் கடவுளின் திருவுளத்திற்கேற்ப ஒத்துழைக்க முன்வந்தார். இதனால் அவர் ''நேர்மையாளர்'' என அறியப்படுகிறார் (மத் 1:19).

கடவுளின் வல்லமை என்பது இயற்கைக்கு எதிரான விதத்தில் கடவுளால் செயல்பட முடியும் என்பதை மட்டும் குறிப்பதில்லை. கடவுள் வல்லமை மிக்கவர் என்பது அவர் மனிதரின் நன்மைக்காக அரும் செயல்களைச் செய்கிறார் என்றே பொருள்படும். கடவுளின் ஆவி நம்மை ஆட்கொள்ளும்போது நாமும் கடவுளின் வல்லமையால் நிரப்பப்படுவோம். அந்த ஆவியின் தூண்டுதலை நாம் உளமார ஏற்று அவர் காட்டும் வழியில் நடந்தால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறுவோம். அப்போது மரியாவைப் போல நாமும் ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது'' எனப் பாடிப் புகழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, அன்னை மரியாவைப் போல நாங்களும் உமது திருவுளத்தை நிறைவேற்ற எப்போதும் முன்வர அருள்தாரும்.