யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2022-12-14




முதல் வாசகம்

நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45:6-8, 18, 21-25

கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே. ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை. அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். "ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு" என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்
திருப்பாடல் 85:8-9, 10-11, 12-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.-பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.-பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.-பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நற்செய்தி அறிவிப்பவரே, உம் குரலை எழுப்பி இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர்"-

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 07: 18-23

யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, ";வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள். அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, "நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

மெசியாவின் காலம் !

வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின.

நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.

மன்றாட்டு:

உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.