யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2022-12-10

புனித லூசியா




முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
திருப்பாடல்80: 1,2. 14-15. 17-18

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'திருமுழுக்கு யோவான் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்' என்றார்'' (மத்தேயு 11:12)

கடவுள் ''வல்லமை மிக்கவர்'' என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில் பரவலாகக் காணக்கிடக்கிறது. தாம் தெரிந்துகொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் கடவுள் எதிரிகளை முறியடிக்கிறார், நாடுகளை வீழ்த்துகிறார், அநீத அமைப்புகளை உடைத்தெறிகிறார். இவ்வாறு வல்லமையோடு செயல்படுகின்ற கடவுள் வன்முறையை ஆதரிப்பதுபோலத் தோன்றும். புதிய ஏற்பாட்டில் நாம் காண்கின்ற கடவுள் அன்புமிக்க தந்தையாக இருக்கிறார். இயேசு வழியாக அவர் தம் அன்பு இதயத்தை நமக்குத் திறந்துள்ளார். நமக்கு எதிராகப் பிறர் தீங்கிழைத்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கலாகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, இயேசு வன்முறையை ஆதரிக்கவில்லை என்பது தெளிவு. அதே நேரத்தில் ''விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகிறது'' என்றும் ''வன்முறையாகத் தாக்குகின்றவர்கள் விண்ணரசைக் கைப்பற்றுவர்'' (காண்க: மத் 11:12) என்றும் இயேசு கூறுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இச்சொற்றொடருக்கு ஒரு மாற்று மொழி பெயர்ப்பை நாம் தமிழ் விவிலியத்தில் காணலாம். அடிக்குறிப்பாகத் தரப்படுகின்ற அந்த மொழிபெயர்ப்பு இதோ: ''திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது. ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்''.

இயேசுவின் காலத்தில் ''தீவிரவாதிகள்'' என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் உரோமை ஆட்சியாளர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றி, நாட்டை விடுதலை செய்வதற்கு ஒரே வழி வன்முறையே என நம்பினர். அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாகக் காண்க: திப 5:35-37; லூக் 13:1. கலகத்தில் ஈடுபட்டுக் கொலைசெய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்த பரபா என்பவன் ஒரு தீவிரவாதியாக இருந்திருக்கலாம் (காண்க: லூக் 23:18-19). தீவிரவாதிகள் வன்முறையால் ஆட்சியை மாற்ற எண்ணினார்கள், வன்முறையைக் கையாளுகின்ற மெசியா கடவுளாட்சியை நிறுவுவார் எனவும் நம்பினார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் இயேசு வேறொரு ஆட்சியை அறிவித்தார். அதைக் கடவுளாட்சி (''விண்ணரசு'') என நற்செய்தியாளர்கள் குறிக்கின்றனர். அந்த ஆட்சி வன்முறையில் பிறக்கின்ற ஆட்சியல்ல. மாறாக, கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்பும் இரக்கமும் நீதியும் உண்மையும் அந்த ஆட்சியின் அடித்தளங்களாக அமையும். எனவே, ஒருவிதத்தில் கடவுளாட்சி வல்லமை மிக்கதுதான். அதன் வல்லமை வன்முறையிலிருந்து பிறப்பதல்ல, மாறாக அன்பிலிருந்து ஊற்றெடுப்பது. எங்கே அன்பும் நட்பும் உளதோ அங்கே கடவுளாட்சி தொடங்கிவிட்டது. அதன் நிறைவை எதிர்பார்த்து நாம் காத்திருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண்போகாது என இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் பங்கேற்க நாங்கள் அன்பு என்னும் ''வல்லமையோடு'' செயலாற்ற அருள்தாரும்.