யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-12-02




முதல் வாசகம்

ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல் 27: 1. 4. 13-14

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அப்பொழுது பெருந்திரளான மக்கள் இயேசுவிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்'' (மத்தேயு 15:30)

இயேசு மகிழ்ச்சி தரும் நல்ல செய்தியை மக்களுக்கு அறிவித்தார். அது மனிதர்களுக்கு நலம் கொணர்ந்த செய்தி. மனிதரின் வாழ்வில் ஏற்படுகின்ற எல்லா இன்னல்களிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கே அச்செய்தி வழங்கப்பட்டது. இவ்வாறு மனிதர் பெறுகின்ற விடுதலையை விவிலியம் பல சொற்களால் விவரிக்கிறது. மனிதரின் உடல் சார்ந்த ஊனங்கள், அவர்களது உள்ளத்தைப் பாதிக்கின்ற ஊனங்கள், அவர்களுக்கும் கடவுளுக்கும் பிற மனிதருக்கும் இடையே நிலவ வேண்டிய நல்லுறவைக் குலைக்கின்ற ஊனங்கள் ஆகிய அனைத்துமே மனிதரைச் சிறுமைப்படுத்துகின்றன. இயேசு கொணர்ந்த விடுதலை மனிதருக்கு முழு நலன் வழங்கவே நமக்கு அருளப்படுகிறது. ''பெருந்திரளான மக்கள் இயேசுவிடம் வருகின்றனர்'' (மத் 15:30). இயேசு வழியாகக் கடவுளே தங்களோடு பேசுகிறார் என்பதை மக்கள் உணர்ந்ததால் அப்போதனையைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமி நிற்கிறார்கள். அவர்கள் இயேசுவிடமிருந்து எதிர்பார்த்தது என்ன? இயேசு நினைத்தால் தங்களுக்கு உடல், உள, ஆன்ம நலன் நல்க முடியும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

இன்று இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற நாம் அக்காலத்தில் இயேசுவின் வல்லமையால் நலம் பெற்ற மனிதர்களைப் போல நலம் பெற முடியுமா? கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர முடியுமா? நம் இதயமும் ஆன்மாவும் கடவுளின் அருளைப் பெற திறந்திருக்கும்போது நாம் கடவுளின் வல்லமையை இன்றும் உணர முடியும். எல்லா மக்களின் முன்னிலையிலும் நிகழ்கின்ற அதிசய செயல்கள் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தை மாற்றி, அதை இறையன்பிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்துகின்ற அனுபவம் நமதாக மாறும். எல்லாரும் கண்டு வியக்கின்ற விதத்தில் உடல் சார்ந்த குணம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தில் நிலவுகின்ற தீமைகளை அகற்றி நாம் நிலைவாழ்வில் பங்கேற்க இறைவன் நம்மில் ஆற்றுகின்ற செயல்களைக் கண்டு நாம் உண்மையிலேயே வியப்படைய வேண்டும். நம் அகக் கண்கள் பார்வையிழந்து இருக்கும் போது நமக்குப் புதுப் பார்வை வழங்குகின்ற கடவுளின் வல்லமையை நாம் வியந்து போற்ற வேண்டும். ஊனமுற்றோரை நாம் இயேசுவிடம் கொண்டு சென்று அவர்கள் நலமடைய வழி வகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு முழு நலன் வழங்குபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.