யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் சனிக்கிழமை
2022-11-26




முதல் வாசகம்

இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 22: 1-7

வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். பின்னர் அந்த வானதூதர் என்னிடம், ``இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்'' என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
திருப்பாடல் 95: 1-2. 3-5. 6-7

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். 4 பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. 5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும்.ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மேலும் இயேசு, 'உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு...எச்சரிக்கையாயிருங்கள்' என்றார்'' (லூக்கா 21:34-35)

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் தவிர்க்க முடியாத நாளாக இருப்பது நம் இறுதி நாள் ஆகும். அன்று நம் மண்ணுலக வாழ்க்கை முடிவுக்கு வரும். அந்த நாள் என்று வரும் என யாருமே முன்கூட்டி அறிய இயலாது. நிலைமை இவ்வாறிருக்க, நாம் சில சமயங்களில் நம் வாழ்வின் இறுதி பற்றி யாதொரு கரிசனையுமின்றி இருந்துவிடுகிறோம். இது குறித்து இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்: ''உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்'' (லூக் 21:34-35). இந்த எச்சரிக்கையை நாம் கவனமாகப் பார்த்தால் அதில் நாம் ''மந்தம் அடையாதவாறு'' எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மந்தம் என்பது விழிப்பற்ற நிலையைக் குறிக்கும். குடிவெறியும் களியாட்டமும் இவ்வுலகக் கவலையும் மந்த நிலையை உருவாக்குகின்றன. குடிபோதையில் இருப்போர் தம்மைச் சூழ்ந்து நடப்பவற்றைச் சரியாக உணரமாட்டார்கள். தெளிவற்ற மனத்தோடு உளறிக்கொண்டிருப்பார்கள். அதுபோல, களியாட்டத்தில் ஈடுபடுவோரும் தம் உள்ளத்தை ஒருமுனைப்படுத்தி சிந்தனையைக் கூர்மையாக வைத்திருக்கமாட்டார்கள். மேலும் உலகக் கவலைகள் நம் உள்ளத்தை அலைக்கழிக்கும் போது அங்கே மன அமைதி இராது. இவ்வாறு நம் உள்ளம் மந்தமாகிப் போகின்ற ஆபத்து உள்ளது.

இயேசு இத்தகைய மந்த நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் எனக் கேட்கின்றார். இன்று நம்மை மந்த நிலையில் வைத்திருக்கின்ற சூழ்நிலைகள் என்ன? இறையாட்சி பற்றிய விழிப்பு நமக்கு ஏற்படாமல் நம்மைச் சிறைப்படுத்துகின்ற நெருக்கடிகள் யாவை? கண்ணயர்ந்துபோய் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்து போகாமல் நம் அகக் கண்களை அகலத் திறந்துவைக்க நமக்குக் கடவுள் தருகின்ற தூண்டுதல் யாது? இதற்கு இயேசு பதில் தருகின்றார்: ''எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' (லூக் 21:36). விழிப்பு, மன்றாட்டு இரண்டுமே நமக்குத் தேவை. இயேசுவே நமக்கு முன்னுதாரணம் தருகின்றார். அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்து ''விழித்திருந்தார்''. அதுபோல, எப்போதும் இறைவேண்டல் செய்வதில் நிலைத்திருந்தார் (காண்க: லூக் 22:39-42). மனித வாழ்வின் நிறைவு கடவுள் நமக்குத் தருகின்ற வாக்குறுதி. அந்நிறைவை அடைய வேண்டும் என்றால் நமக்கு விழிப்புத் தேவை; நம் உள்ளம் மந்த நிலையிலிருந்து விடுபட்டு இறையுணர்வில் தோய்ந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம் உடனிருப்பை உணர்ந்து உம்மையே கருத்தில் கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.