யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் திங்கட்கிழமை
2022-11-14

புனித எலிசபேத் (கங்கேரி)




முதல் வாசகம்

நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 1: 1-4; 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வான தூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார். இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறுபெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது. ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணை முன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! ``எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: `தமது வலக் கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழு பொன் விளக்குத் தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின் பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு; முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வாழ்வு தரும் மரத்தின் கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

அக்காலத்தில் இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், ``இது என்ன?'' என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். உடனே அவர், ``இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், ``தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், ``நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ``ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார். இயேசு அவரிடம், ``பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்'' (மத்தேயு 25:20)

இறையாட்சி பற்றி இயேசு கூறிய உவமைகளுள் ''தாலந்து உவமை'' சிறப்பானது. தாலந்து என்னும் நாணயம் வெள்ளியாகவோ பொன்னாகவோ இருக்கலாம். பத்து ஆண்டுகள் வேலை செய்தால் கிடைக்கின்ற கூலி ஒரு வெள்ளி தாலந்துக்கும் அதைப் போல முப்பது மடங்கு ஒரு பொன் தாலந்துக்கும் மதிப்பு உண்டு. எனவே, தாலந்தின் எண்ணிக்கை ஐந்தோ, இரண்டோ, ஒன்றோ எதுவாக இருந்தாலும் அதன் மதிப்பு உண்மையிலேயே பெரிதுதான். இவ்வாறு பெருந்தொகையைப் பெற்ற மூவருள் இருவர் மட்டுமே அத்தொகையைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் தாம் பெற்ற பணத்தைப் புதைத்துவைக்கிறார். திருடர்களின் கண்களில் பணம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு முன்மதியோடு செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவர் தாம் பெற்ற பணத்தை நன்முறையில் முடக்கி, மேலும் அதிக பணம் திரட்ட முன்வரவில்லை. இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகின்ற செய்தி என்ன? கடவுளின் ஆட்சி என்பது நம்மேல் திணிக்கப்படுகிற ஒன்று அல்ல. அது கடவுள் நமக்குத் தருகின்ற கொடை. ஆனால் அக்கொடையைப் பெற்ற நாம் சோம்பேறிகளாக இருத்தல் ஆகாது. நாம் பெற்ற கொடையை நன்றியோடு ஏற்க வேண்டும்; அதே நேரத்தில் அக்கொடை நமக்கும் பிறருக்கும் பயன்படுகின்ற விதத்தில் நாம் விழிப்பாகச் செயல்பட்டு, பெரு முயற்சி செய்து அதை மேம்படுத்த வேண்டும்.

''இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்'' என்று கூறிய பணியாளர் தம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. மாறாக, பொறுப்புணர்வோடு செயல்பட்டார். அவ்வாறு பொறுப்புணர்வோடு செயல்பட்டதால்தான் தலைவர் அவரைப் பார்த்து, ''என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்'' எனக் கூறி வரவேற்கிறார். கடவுள் வழங்குகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்ப வேண்டும். அவரோடு ஆழ்ந்த உறவு கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மைத் தேடி வந்து தம் அன்புப் பிணைப்பில் நம்மை அணைத்துக் கொள்வதால் நாம் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். எனவே, கடவுளின் ஆட்சியில் பங்கேற்க விழைவோர் பொறுப்போடு செயல்பட வேண்டும். தம் தலைவராகிய கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப ஒழுக வேண்டும். அப்போது ''என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்'' என்னும் அழைப்பு நம்மையும் வந்துசேரும் (காண்க: மத்தேயு 25:21,23).

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை மண்ணில் புதைத்துவைக்காமல் நன்முறையில் பயன்படுத்த அருள்தாரும்.