யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-11-08

புனித மார்டீன்




முதல் வாசகம்

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8,11-14

அன்பிற்குரியவரே, நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு. வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத் தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மன உறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல். அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு. இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி, கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது. அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு. நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு; நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு. யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப் பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள். ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வரும்.
திருப்பாடல் 37: 3-4, 18,23. 27,29

ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 29 நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: ``உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா?' என்று கேட்டார்'' (லூக் 17:7)

இயேசு வாழ்ந்த காலத்தில் அடிமை முறை வழக்கில் இருந்தது. மனித ஆட்கள் என்றால் அவர்களுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட மாண்பு ஒன்றுளது என நாம் இன்று ஏற்றுக்கொள்வோம். எனவே யாரும் யாருக்கும் அடிமையில்லை என்னும் தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவம் நிலவ வேண்டும் என வாதாடுவோம். ஆனால் அக்காலத்தில் மனிதர்களில் சிலருக்கு மனித மாண்பு மறுக்கப்பட்டது. அவர்கள் ஆடுமாடுகளைப் போல விற்றல் வாங்கல் முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அடிமைகள் முழு மனிதப் பண்பு கொண்ட ஆட்களாக மதிக்கப்படாததால் சுதந்திரமாக நடமாடும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. நம் நாட்டிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. இன்றும்கூட நடைமுறையில் கொத்தடிமை முறை இருப்பதை அறிவோம். அடிமையாக்கப்பட்டவர்கள் ''பணியாளர்களாக''க் கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் எசமானர்களுக்கு வயல் வேலை செய்தார்கள்; ஆடு மாடு மேய்த்தார்கள்; சில வேளைகளில் சமையலும் செய்துகொடுத்தார்கள். இயேசு கூறிய உவமையில் வருகின்ற ''பணியாளர்'' இத்தகைய ஓர் அடிமையே. வயலில் நாள் முழுதும் கடின உழைப்பில் ஈடுபட்ட பிறகு வீடு திரும்பிய பின் உடனடியாக இன்னொரு வேலை அவருக்காகக் காத்திருந்தது. இந்த உவமையைக் கூறிய இயேசு, நாம் ஒருவர் ஒருவருக்குப் பணியாளராக மாற வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டவில்லை. நாம் பணிவிடை பெறுவதில் கவனம் செலுத்தாமல், பணிவிடை புரிவதில் கருத்தாயிருக்க வேண்டும் என்னும் போதனையை இயேசு வேறு தருணங்களில் வழங்குகிறார் (காண்க: லூக் 22:25-27). இந்த உவமை வழியாக (லூக் 17:7-10) இயேசு, நாம் புரிகின்ற பணிக்காக நம்மைப் பிறர் பாராட்ட வேண்டும் என நாம் எதிர்பார்த்தல் ஆகாது என கற்பிக்கிறார்.

இயேசு புகட்டுகின்ற இந்தப் பாடம் அவருடைய சீடர்களாகிய நம் அனைவருக்கும் பொருந்தும். இறையாட்சிப் பணியில் ஈடுபடுவோர் ஏதோ ஆதாயம் தேடுவதற்காக அப்பணியைச் செய்வது முறையல்ல. மாறாக, கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவிப்பது தங்களுக்கு அளிக்கப்பட்ட பணி என நல்ல உள்ளத்தோடு அதை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். கடவுளின் கைகளில் நாம் கருவிகளே தவிர நம் சொந்த விருப்பப்படி செயல்படுவதில்லை. இருந்தாலும், நாம் மனமுவந்து அப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது தெளிவு. எனவேதான் கடவுள் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. நாம் சுதந்திர உணர்வோடு அவருடைய பணியைச் செய்வதில் ஈடுபட வேண்டும். அப்போது பாராட்டுக்காகச் செயல்படாத நம்மை நம் கடவுள் பாராட்டுவார். ஏனென்றால் அவருடைய புகழுக்காக நாம் செயல்படும்போது நமது வாழ்க்கை நம் கற்பனையை விஞ்சிய விதத்தில் வளம்பெறும் என்பதே உண்மை. இறைபுகழ் பெருகப் பெருக மனிதரின் உண்மையான நலனும் வளர்ந்தோங்கும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களை அழைக்கும்போது நாங்கள் கைம்மாறு கருதாமல் செயல்பட அருள்தாரும்.