யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-11-04




முதல் வாசகம்

மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17 - 4: 1

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல் 122: 1-2. 4-5

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவின் வார்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை' என்றார். அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது' என்றார்'' (லூக்கா 14:26)

பழைய மொழிபெயர்ப்பில் ''...தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால்'' என்பது ''...தன் உயிரையுமே வெறுக்காவிட்டால்'' என்றிருந்தது. கிரேக்க மூலத்தில் ''வெறுக்காவிட்டால்'' என்றுதான் உள்ளது. ஆகவே, இயேசுவைப் பின்செல்வோர் தம் குடும்பத்தையும் தம்மையும் ''வெறுக்க வேண்டுமா'' என்னும் கேள்வி எழுகிறது. ''வெறுப்பு'' என்னும் சொல் ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. நமக்கு விருப்பமில்லாததை நாம் ''வெறுக்கிறோம்'' எனலாம். குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்றால் இவ்வாறு ''உணர்ச்சி''யளவில் நாம் குடும்பத்தைப் ''பகைக்க வேண்டும்'' என்று பொருள் ஆகாது. அதுபோல நாம் நம்மையே ''வெறுக்கவேண்டும்'' என்றால் நம்மைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று பொருளாகாது. ''வெறுப்பு'' என்னும் சொல் நம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை இங்கே குறிக்கிறது. அதாவது, நாம் குடும்பத்தையும் நம் உயிரையும் விட இயேசு கிறிஸ்துவைப் பின்செல்வதை ''மேலானதாக''க் கருத வேண்டும். இவ்வாறு நாம் கருதுவதைப் பார்க்கின்ற பிற மக்கள் நாம் குடும்பத்தையும் நம் உயிரையும் ''வெறுக்கிறோம்'' என்னும் முடிவுக்குத் தான் வருவார்கள். ஆனால் இயேசு இத்தகைய முடிவுபற்றிக் கவலைப்படவில்லை. அவரே தம் குடும்பத்தை விட்டுவிட்டுத் தம் வாழ்க்கையை இறையாட்சிப் பணிக்காக அர்ப்பணித்தார். தம் ''தந்தையின் அலுவல்களில்'' அவர் ஈடுபட்டிருந்தார் (காண்க: லூக் 2:49). தம் உயிரை நமக்காகச் சிலுவையில் கையளித்தார். தந்தையின் திருவுளத்திற்கு அமைந்து வாழ்வதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது,

இயேசுவைப் பின்சென்ற சீடர்கள் தங்கள் பெற்றோரையும், மனைவி பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றார்கள் என்றால் அவ்வாறு கைவிடப்பட்ட குடும்பத்தின் நிலை என்னவாயிற்று என்னும் கேள்வி எழலாம். அக்குடும்பத்தினர் துன்புற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மகன் பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பதும் கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான பொருள் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பதும் அக்கால வழக்கம். குறிப்பாக, பெண்கள் பொருளாதார நிலையில் தனித்துச் செயல்பட முடியாத சூழமைவே அன்று இருந்தது. ஆக, சீடர்கள் தம் குடும்பத்தை விட்டு இயேசுவைப் பின்சென்ற போது அக்குடும்பத்தினர் பல துன்பங்களைச் சந்தித்திருப்பார்கள் என நாம் உறுதியாகக் கூறலாம். என்றாலும் இத்தகைய துன்பம் இரண்டு மூன்று ஆண்டுகளே நீடித்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசுவின் சிலுவைச் சாவுக்குப் பிறகு, அவர் உயிர்பெற்றெழுந்ததும் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மீண்டும் உறவு ஏற்படுத்தியிருப்பார்கள் எனத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, பவுல் ''மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?'' என்று கேட்கிறார் (காண்க: 1 கொரி 9:5). இதிலிருந்து கேபா (பேதுரு) மற்றும் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உறவாடத் தொடங்கினர் என்பது தெரியவருகிறது. எவ்வாறாயினும், இயேசுவைப் பின்செல்வோர் தம் சொந்தக் குடும்பம், சொத்து, ஏன் தம் உயிர் என பற்றுக்கொண்டு வாழாமல் அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டுத் துறந்துவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்னும் இயேசுவின் போதனை இக்காலத்தில் வாழ்கின்ற நமக்கும் பொருந்தும்.

மன்றாட்டு:

இறைவா, பற்றற்ற உள்ளத்தோடு உம்மைப் பற்றிக் கொள்ள எங்களுக்கு அருள்தாரும்.