யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-11-01

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா




முதல் வாசகம்

வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்?
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, ``எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்'' என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், ``அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது'' என்று உரத்த குரலில் பாடினார்கள். அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். ``ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்'' என்று பாடினார்கள். மூப்பர்களுள் ஒருவர், ``வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?'' என்று என்னை வினவினார். நான் அவரிடம், ``என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்'' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: ``இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல் 24: 1-2. 3-4. 5-6

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்;
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நாமும் புனிதர்களே !

புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச் சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி விடுவோம். புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில் நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின் பெயர்களைப் பார்க்கலாம். இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில், இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணி;ல் இறையின்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில் பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்.

இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களையும் நினைவுகூர்ந்து, இறைவனைப் போற்றுகிறது. நன்றி கூறுகிறது. பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைத்துப் புனிதர்களையும் இன்று எண்ணிப்பார்க்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புனிதர்கள் என்பார் யார்? தங்களுடைய வாழ்வையும், பணியையும் இறைவனின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொண்டவர்கள்தான் புனிதர்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் மலைப்பொழிவைத் தம் வாழ்வாக்கிய அனைவருமே புனிதர்கள்தான். இந்த நாள் நமக்கு விடுக்கும் அழைப்பு: நாமும் புனிதராக வாழவேண்டும். புனித வாழ்வை விரும்ப வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள், வியத்தகு வரங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாமல், அவர்களும் நம்மைப் போன்ற நிறைகளும், குறைகளும் கொண்டவர்களே என்பதையும், ஆனால், நாள்தோறும் தங்கள் வாழ்வை இறைவார்த்தையின்படி நடத்தியவர்கள் என்பதையும் நினைவுகூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழலாம், முயற்சி செய்யலாம்.

மன்றாட்டு:

புனிதர்களின் பேரின்பமே இறைவா, தங்கள் வாழ்வில் உம்மை மாட்சிப்படுத்தி, இன்று உம்மோடு வாழும் பேறுபெற்ற அனைத்துப் புனிதர்களுக்காகவும். அவர்களுக்கு நீர் அளித்த மாட்சியின் மணிமுடிக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். இறைவா, எங்கள் வானகத் தந்தையாகிய நீர் தூயவராய், இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல. நாங்களும் வாழவும், அதன்வழி புனிதர்களாய் மாறவும் அருள்தாரும்.