யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-10-28

புனிதர்கள் சீமோன், யூதா - திருத்தூதர்கள் விழா




முதல் வாசகம்

திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல்19: 1-2. 3-4

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே.

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு, ''இறையாட்சி...ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின' என்றார்'' (லூக்கா 13:18-19)

கடுகு விதை மிகச் சிறிது. தமிழ் இலக்கிய மரபிலும் கடுகு, தினை மற்றும் ஆல விதைகள் சிறுத்திருப்பது பற்றிய கூற்றுக்கள் உண்டு. ''கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று திருக்குறளைப் புகழ்கின்றார் இடைக்காடர். தினையையும் பனையையும் ஒப்பிடுவார் வள்ளுவர் (குறள் 104). சிறிய விதையிலிருந்து வானோக்கி வளர்ந்து விரிகின்ற ஆல மரம் அரசனின் படைக்கு நிழலாகும் என்பதும் இலக்கிய வழக்கு. அதுபோல இயேசு கடுகு பற்றி ஒரு சிறு உவமை வழி இறையாட்சியின் தன்மையை விளக்குகிறார். பாலஸ்தீன நாட்டில் கடுகு வகைகள் பல உண்டு. அவற்றுள் ஒருவகை 10 அடி வரை வளர்ந்து ஓங்கும் மரமாக உயர்வதுண்டு. இயேசு தொடங்கிவைத்த இறையாட்சியும் சிறிய அளவில் ஆரம்பமானாலும் மிக உயர்ந்தும் விரிந்தும் வளர்ந்தோங்கும் தன்மையது. பழைய ஏற்பாட்டில் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: எசே 17:22-24). அது 50 அடி வரை வளர்ந்து பெருமரமாகக் காட்சியளிக்கும். ஆனால் இயேசு இறையாட்சியை அத்தகைய பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடவில்லை. மாறாக, மிகச் சிறிய விதையிலிருந்து தோன்றி வளர்கின்ற ஒரு சிறு மரத்திற்கு அதை ஒப்பிடுகிறார். நோயுற்ற மனிதர்களுக்கு நலமளிப்பதும், மக்களுக்கு இறையாட்சி பற்றிச் சொல்லாலும் செயலாலும் போதிப்பதுமே இயேசுவின் பணியாக இருந்தது. சிறிய அளவில் தொடங்கிய அப்பணி உலகளாவிய பெரும் பணியாக விரியும். எல்லா மனிதர்களும் இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க இயலும்.

வானத்துப் பறவைகள் என்னும் உருவகம் வழியாக இயேசு இறையாட்சி என்பது எல்லா மக்களையும் வரவேற்கின்ற இடம் எனக் காட்டுகிறார். பறவைகள் மரத்தில் கூடு கட்டும். மரத்துக் கனிகளை உண்டு மகிழும். கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடும். இறையாட்சியும் அவ்வாறே என்க. மனிதர்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைக்கும்போது கடவுளின் ஆட்சியில் பங்கேற்பார்கள். அவர்களது இதயத்தில் கடவுள் பற்றிய உணர்வு ஆழப்படும். தங்கள் இதயக் கதவுகளை அவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் திறந்துவிடுவார்கள். பிறரது இன்பதுன்பங்களில் பங்கேற்பார்கள். இவ்வாறு கடவுளாட்சி என்பது எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்தி அவற்றை உறுதிப்படுத்துகின்ற தன்மையது.

மன்றாட்டு:

இறைவா, மனித வாழ்வு சிறு தொடக்கமாயினும் நிறைவை நோக்கி நீர் எங்களை வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.