யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-10-16

(இன்றைய வாசகங்கள்: முதல் வாசகம்: விடுதலைப்பயண நூல் 17:8-13,திருப்பாடல்கள் 121;1-8,புனித பவுல் 2திமொத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம் 3;14 4;2,புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 18-1-8)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

செபிப்பவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நேரிய உள்ளத்தோடு மன்றாடும் போது, அவர் நம் செபத்துக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையைப் பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் வேண்டுகோளுக்கு இவ்வுலக அதிகாரிகள் பதில் அளிப்பதைக் காட்டிலும், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்டவர் விரைந்து செயல்படுவார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். "தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்க ளுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்து வாரா?" என்ற இயேசுவின் கேள்வியை மனதில் இருத்துவோம். நம் வேண்டுதலுக்கு கடவுள் உரிய பதில் தருவார் என்ற நம்பிக்கையோடு நமது வேண்டுதல்களை ஆண்டவரிடம் சமர்ப்பித்து, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.



முதல் வாசகம்

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்;
முதல் வாசகம்: விடுதலைப்பயண நூல் 17:8-13

அந்நாட்களில் பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, "நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்" என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
திருப்பாடல்கள் 121;1-8

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்?பல்லவி

2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி 3 அவர் உம் கால் இடறாதபடி பாhத்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.பல்லவி

4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை.பல்லவி

5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!பல்லவி

6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. 7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார்.பல்லவி

8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.பல்லவி

இரண்டாம் வாசகம்

நான் ஆணையிட்டுக் கூறுவது; இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு.
புனித பவுல் 2திமொத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம் 3;14 4;2

அன்பிற்குரியவரே,நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது; இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 18-1-8

அக்காலத்தில் அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், "நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். " பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எம் ஆயரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே,

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத்தர வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு அளிப்பவரே இறைவா,

உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

மனந் தளராமல் செபிப்போம் !

இடைவிடாது, மனந்தளராது செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான உவமையை இன்று வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின் தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம் கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்? இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக் குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத் தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர் (34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில் ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும். பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக் குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது. எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ் பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.

மன்றாட்டு:

புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.