யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






பொதுக்காலம் 28வது வாரம் சனிக்கிழமை
2022-10-15




முதல் வாசகம்

கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர், அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு, ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு, உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.
திபா 8: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. 2ய பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர். பல்லவி

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்' என்றார்'' (லூக்கா 12:10)

தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் என்னும் போதனை மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் உண்டு (காண்க: மத் 12:32; மாற் 3:28-29). தீய ஆவிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின் சக்தியைக் கொண்டே அவ்வாறு செயல்பட்டார் என யூத மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர். இயேசுவிடம் கடவுளின் சக்தி துலங்குகிறது என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இத்தகைய மனப்பான்மைதான் ''தூய ஆவிக்கு எதிரான பாவம்'' என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் உள்ளது. ஆனால் லூக்கா நற்செய்தியிலோ இப்போதனை இன்னொரு சூழலில் வழங்கப்படுகிறது. அதாவது, இயேசுவைப் பின்செல்கின்ற சீடர்கள் அவரைப் பற்றியும் அவர் அறிவித்த இறையாட்சி பற்றியும் எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழக் கூடும். அந்த நேரங்களிலும் சீடர்கள் மன உறுதி தளர்ந்துவிடக் கூடாது.

துணிந்து நற்செய்தியை அறிவிப்போருக்குத் தூய ஆவியின் துணை எப்போதுமே இருக்கும். இந்தத் தூய ஆவி நம் உள்ளத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி எழுப்புகிறார்; நாம் நற்செய்தி வழியில் நடந்திட நமக்கு மன உறுதி தருகிறார்; நம் வாழ்க்கைச் சூழலில் நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்க நமக்கு சக்தி வழங்குகின்றார். இந்தத் தூய ஆவியைப் பழித்துப் பேசுவோர் கடவுளின் செயல்பாட்டையே எதிர்ப்போர் ஆவர். எனவே, அவர்கள் உளமார மனம் வருந்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால் அவர்கள் கடவுளின் துணை தங்களுக்குத் தேவை இல்லை என முடிவுசெய்துவிட்டார்கள் எனவே நாம் கருத வேண்டும். எனவேதான் இயேசு ''தூய ஆவியைப் பழித்துரைப்போர் மன்னிப்புப் பெற மாட்டார்'' (லூக் 12:10) என்றுரைத்தார். நம் வாழ்விலும் தூய ஆவி வல்லமையோடு செயலாற்றுகின்றார். அவருடைய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட நாம் திறந்த உளம் கொண்டவர்களாக மாறிட வேண்டும். ''தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம்'' (1 தெச 5:19) என்று பவுல் கூறுவது இவண் கருதத் தக்கது.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவியால் வழிநடத்தப்பட எங்களையே காணிக்கையாக்க அருள்தாரும்.