யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-10-09

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17,திருப்பாடல்கள் 98: 1. 2-3a. 3b-4,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

நன்றியுள்ளவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் உதவியை நம்பிக்கையோடு கேட்கவும், பெற்ற நன்மைகளுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்தவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் மட்டும் கடவுளைத் தேடுவது சரியல்ல என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்ல, இறைவனின் விருப்பத்தை முதன்மையாக நிறைவேற்ற இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். குணமடைந்த பத்து தொழுநோயாளர்களில் சமாரியரான ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற இயேசுவின் கேள்வி அவர் நன்றியை எதிர்ப்பார்ப்பவர் என் பதை நமக்குத் தெளிவாக்குகிறது. இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி மறக்காதவர்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17

அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப் போல் மாறினது. பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து,�இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்� என்றார். அதற்கு எலிசா, �நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்� என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது நாமான் அவரை நோக்கி, �சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல்கள் 98: 1. 2-3a. 3b-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: `நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ``ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, ``பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், ``எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எம் ஆயரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்மைகளின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி

எங்கள் வாழ்வில் நீர் எங்களுக்குத் தந்திருக்கிற அனைத்துக் கொடைகளுக்காகவும், நன்மைகளுக்காகவும், ஆசிகளுக்காகவும்; நாங்கள் நன்றி கூறுகிறோம். நல்ல மனிதர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் நன்றி. அந்த உறவுகளின் வழியாக நீர் தருகின்ற மகிழ்ச்சி, நிறைவு, நன்மைகளுக்காகவும் நன்றி. நாங்கள் எந்நாளும் உமக்க நன்றியுள்ளவர்களாக வாழும் வரத்தைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு அளிப்பவரே இறைவா,

உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13)

இயேசு தம் பணிக்காலத்தின்போது பல மக்களுக்கு நலமளித்தார். அவ்வாறு நலமடைந்தவர்களுள் தொழுநோயாளரும் இருந்தார்கள். இன்று நாம் தொழுநோய் என அறிவியல் முறையில் கருதுவது மட்டுமல்லாமல், எந்த விதமான தோல் நோயும் அக்காலத்தில் தொழுநோய் எனவே அழைக்கப்பட்டது. இயேசு மக்களுக்குக் குணமளிக்கிறார் என்னும் செய்தியைக் கேட்ட பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகி அவர் தங்களைக் குணமளிக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறார்கள்; ஆனால் யூத சட்டப்படி அவர்கள் தங்கள் நோய் பிறருக்குப் பரவிவிடாமல் இருக்க தூரத்தில்தான் நிற்க வேண்டும். அவர்கள் பிற மக்களோடு தொடர்புகொள்ளக் கூடாது என்னும் சட்டம் இருந்ததால் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்டுத்தான் வாழ வேண்டியிருந்தது. இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர் இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு நினைத்தால் தங்களுக்குக் குணமளிக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களுக்குக் குணமளிக்கிறார்.

பத்துப் பேர் நோய்நீங்கப் பெற்ற பிறகும் ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இவ்வாறு வந்தவர் அக்காலத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்ட சமாரியர் என்பது வியப்புக்குரியதே. ஆனால் இயேசு இந்தத் தாழ்த்தப்பட்ட மனிதரின் நம்பிக்கையைப் போற்றி உரைக்கிறார். ''உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்று பாராட்டிப் பேசுகிறார் (காண்க: லூக்கா 17:19). இங்கே ''நலம்'' என வருகின்ற சொல்லுக்கு உடல் நலம் தவிர, உள நலம், ஆன்ம நலம், மீட்பு என்னும் ஆழ்ந்த பொருள் உண்டு. இயேசுவின் அருளால் உடல்நலம் பெற்ற சமாரியர் கடவுளோடு நல்லுறவு அடைந்தார். நன்றியோடு கலந்த மகிழ்ச்சியை அச்சமாரியர் அடைந்தார். கடவுளின் அன்பினை அவர் தம் உள்ளத்தில் அனுபவித்தார். இயேசுவின் சீடராகிய நாமும் நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்றால் நம் பிணிகள் யாவும் நீங்கிப் போக, நாம் ''முழு நலன்'' அடைவோம். இந்த அனுபவத்தைப் பெறுவோர் உண்மையில் பேறுபெற்றவர்களே'

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் பிணிகளைப் போக்கி நலமளிக்கின்றீர் என நாங்கள் உணரச் செய்தருளும்.