யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் வியாழக்கிழமை
2022-09-29

0தூயமிக்கேல் கரிரியேல் ரபேல் -




முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
திருப்பாடல்138: 1-5

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)

ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.

இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.