யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் புதன்கிழமை
2022-09-28

குழந்தை யேசுவின் புனித தெரேசா




முதல் வாசகம்

இறைவன் முன் மனிதர் நேர்மையாய் இருப்பதெப்படி?
யோபு நூலிலிருந்து வாசகம் 9: 1-12, 14-16

யோபு தன் நண்பர்களுக்குக் கூறிய மறுமொழி: உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன் முன் நேர்மையாய் இருப்பதெப்படி? ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள். அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. தாமே தனியாய் வானை விரித்தவர். ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே. இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை. நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைக் கேட்பார் யார்? இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? நான் நேர்மையாக இருந்தாலும், அவருக்குப் பதிலுரைக்க இயலேன். என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்; நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
திருப்பாடல் 88: 9-10. 11-12. 13-14

9 ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன். 10 இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? பல்லவி

11 கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா? 12 இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? பல்லவி

13 ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன். 14 ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்? பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில் இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ``நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, ``என்னைப் பின்பற்றி வாரும்'' என்றார். அவர், ``முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்'' என்றார். வேறொருவரும், ``ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஒருவர் 'முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்' என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்' என்றார்'' (லூக்கா 9:59-60)'

இயேசு தம்மைப் பின்பற்றும்படி பலரிடம் கேட்டதுண்டு. ஒரு சிலர் அவருடைய அழைப்பை ஏற்றனர். வேறு சிலர் தாம் பெற்ற அழைப்பை ஏற்கவில்லை. இத்தகைய ஒரு மனிதர் இயேசுவிடம், ''முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' எனக் கேட்கிறார் (லூக் 9:59). இக்கோரிக்கை நமக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் இயேசு வாழ்ந்த காலத்தில் நிலவிய ஒரு பழக்கத்தை நாம் இங்குக் காண்கிறோம். அதாவது, வீட்டில் பெற்றோர் இறந்துவிட்டால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பொறுப்பு பிள்ளைகளைச் சார்ந்தது. அவர்கள் இப்பொறுப்பை மிக்க கரிசனையோடு நிறைவேற்ற வேண்டும் என்னும் பழக்கம் இஸ்ரயேலர் நடுவே நிலவியது. யூத குருக்களும் தம் பெற்றோரை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கடமை இருந்தது. இறந்தோரை அண்டிச் செல்லும்போது வழிபாடு தொடர்பான தூய்மை கெட்டுவிடும் என்னும் சட்டம் இருந்தாலும் இறந்தோரை அடக்கம் செய்யும் கடமை அதைவிட மேலானதாகக் கருதப்பட்டது. எனவே, வீட்டுக்குச் சென்று ''முதலில்'' தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு இயேசுவைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த அந்த மனிதர் தம் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டினார் என நாம் அறியலாம். அக்கடமையை ''முதலில்'' நிறைவேற்றிவிட்டு, அதற்குப் ''பிறகு'' இயேசுவைப் பின்செல்வதாகக் கூறிய அம்மனிதருக்கு இயேசு அளித்த பதில் நமக்கு வியப்பாகத் தோன்றலாம்.

இயேசு ''இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார் (லூக் 9:60). இது மூல மொழியில் ''இறந்தோர் இறந்தோரை அடக்கட்டும்'' என்றுள்ளது. இதற்கு, ''ஆன்மிக முறையில் செத்துப் போனவர்கள் இறந்தவர்களை அடக்கும் பொறுப்பை நிறைவேற்றட்டும்'' என்று பலர் பொருள்கொள்வர். இருப்பினும் அக்கால வழக்கப்படி இரண்டு அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இறந்தவரின் சடலத்தை முதலில் அடக்கம் செய்வார்கள். பின், ஏறக்குறைய ஓர் ஆண்டு கழிந்த பிறகு கல்லறையைத் தோண்டி இறந்தவரின் எலும்புகளை எடுத்து இன்னோர் இடத்தில் அடக்கம் செய்வார்கள். எனவே, ''முதலில் அடக்கம் செய்யப்பட்டு, பின் இரண்டாம் முறையாகவும் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இப்போது இறப்போரை அடக்கம் செய்துகொள்வாhகள்'' என இயேசு ஓர் முரண்பாட்டு வகையான செய்தியைச் சிலேடையாகக் கூறியதாகப் பொருள்கொள்வதும் வழக்கம். எப்படியாயினும், இயேசு இங்கே ஒரு புரட்சிகரமான போதனையை வழங்குகிறார். அதாவது, குடும்பக் கடமைகளையும் பொறுப்புகளையும் அப்படியே விட்டுவிட்டு, இயேசுவைப் பின்செல்ல வேண்டும். இறையாட்சியைப் பற்றி அறிவிக்கும் கடமை குடும்பக் கடமைகளை விடவும் முக்கியமானது. இவ்வாறு இயேசு போதித்தது அக்கால சமூக-சமய அமைப்புகளைப் புரட்டிப் போடும் விதத்தில் அமைந்திருந்தது. இன்றும் கூட, இயேசுவை முழு மனத்தோடு பின்பற்ற விரும்புவோர் சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து, இறையாட்சியின் மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் பங்கேற்பதற்கும் அதை உலகுக்கு அறிவிப்பதற்கும் முன்னுரிமை அளிக்க எங்களுக்கு அருள்தாரும்.