யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-09-23

புனிதர்கள் கேரஸ்மஸ் தமியான்
முதல் வாசகம்

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
திருப்பாடல் 144: 1-4

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! 2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! பல்லவி

3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? 4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, ... இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்'' (லூக்கா 9:1-2)

இயேசு தம் பணியைத் தொடர்வதற்காகப் பன்னிரு திருத்தூதர்களை அனுப்பிய செய்தியையும், எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பிய செய்தியையும் லூக்கா பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 9:1-6; 10:1-12). இந்த இரண்டு பதிவுகளும் ஒரே நிகழ்வின் இரு வடிவங்களாக இருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இயேசுவின் பணியைத் தொடர்வதற்காக அனுப்பப்பட்ட சீடர்களின் வரலாற்றில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் பிரதிபலிப்பதை நாம் காணலாம். இயேசு தம் சீடர்களை அனுப்புவது இரண்டு முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக. அவர்கள் ''இறையாட்சி பற்றிப் பறைசாற்ற வேண்டும்''; ''நற்செய்தியை அறிவிக்க வேண்டும்'' (லூக் 9:2,6). இவ்வாறு பணியாற்றும்போது சீடர்கள் ''உடல் நலம் குன்றியோரின் பிணிகளையும் போக்குவார்கள்'' (காண்க: லூக் 9:2). அன்று சீடர்களுக்கு அளித்த பணியை இன்றைய திருச்சபையும் தொடர வேண்டும். இறையாட்சி நம்மிடையே வந்துள்ளது என்னும் நல்ல செய்தியை அறிவிக்கின்ற அதே நேரத்தில் திருச்சபை மக்களின் பிணிகளையும் போக்க வேண்டும். இந்த பிணிகள் பல வகை: உடல், உளம், ஆன்மா சார்ந்த எல்லாவித ஊனங்களும் குறைபாடுகளும் ''பிணிகள்'' எனலாம். கொடிய வறுமையில் வாடுவோர், சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோர், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் ஆகிய எல்லா மக்களுமே ஒருவிதத்தில் ''பிணி''களால் அவதிப்படுகிறவர்களே. இவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் அறிவிக்கும் நற்செய்தி என்ன? எல்லாவித அநீதிகளிலிருந்தும் மக்களை விடுவிக்க இயேசு வந்தார் என்னும் நற்செய்தியை அறிவிக்காமல் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற இயலாது.

மேலும் இயேசு ''பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்'' என்றார் (லூக் 9:3). இந்த அறிவுரை இன்றைய வாழ்க்கைச் சூழமைவுகளுக்குப் பொருந்திப் போகாது என நாம் நினைக்கலாம். ஆனால் இயேசு வழங்கிய அறிவுரையின் உட்பொருளை நாம் மறந்துவிடலாகாது. இயேசுவின் பணியைத் தொடர்வோர் உலகப் பார்வையில் செயல்படாமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். அக்காலத்தில் பயணம் சென்றவர்கள் கைத்தடி வைத்துக்கொண்டார்கள். நடக்கும்போது ஊன்றிக்கொள்வதற்கும், வழிப்பறிக்காரர்களிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் அது பயன்பட்டது. பையில் உணவுப் பொருள் மற்றும் பணம் போன்றவற்றை வைத்திருந்தார்கள். மாற்று உடையாக ஓர் உள்ளாடையும் பயன்பட்டது. ஆனால் இயேசுவின் சீடர்கள் மற்ற வழிப்போக்கர்கள் போலத் தங்களைக் கருதாமல் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கடவுளையே நம்பியிருக்க வேண்டும். அதுபோல, வீடுவீடாகச் சென்று உதவி கேட்காமல் பிறர் கொடுப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டும். ஆக, பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டவர்கள் பிற பற்றுகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் கடவுளின் பணியை நன்முறையில் ஆற்ற இயலும் என்பது இன்று வாழும் நமக்கு விடப்படுகின்ற சவால்.

மன்றாட்டு:

இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் செயல்பட அருள்தாரும்.