யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வியாழக்கிழமை
2022-09-22




முதல் வாசகம்

வீண், முற்றிலும் வீண், என்கிறார்
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. ஞாயிறு தோன்றுகின்றது; ஞாயிறும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, `இதோ, இது புதியது' என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14, 17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, ... இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்'' (லூக்கா 9:1-2)

இயேசு தம் பணியைத் தொடர்வதற்காகப் பன்னிரு திருத்தூதர்களை அனுப்பிய செய்தியையும், எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பிய செய்தியையும் லூக்கா பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 9:1-6; 10:1-12). இந்த இரண்டு பதிவுகளும் ஒரே நிகழ்வின் இரு வடிவங்களாக இருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இயேசுவின் பணியைத் தொடர்வதற்காக அனுப்பப்பட்ட சீடர்களின் வரலாற்றில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் பிரதிபலிப்பதை நாம் காணலாம். இயேசு தம் சீடர்களை அனுப்புவது இரண்டு முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக. அவர்கள் ''இறையாட்சி பற்றிப் பறைசாற்ற வேண்டும்''; ''நற்செய்தியை அறிவிக்க வேண்டும்'' (லூக் 9:2,6). இவ்வாறு பணியாற்றும்போது சீடர்கள் ''உடல் நலம் குன்றியோரின் பிணிகளையும் போக்குவார்கள்'' (காண்க: லூக் 9:2). அன்று சீடர்களுக்கு அளித்த பணியை இன்றைய திருச்சபையும் தொடர வேண்டும். இறையாட்சி நம்மிடையே வந்துள்ளது என்னும் நல்ல செய்தியை அறிவிக்கின்ற அதே நேரத்தில் திருச்சபை மக்களின் பிணிகளையும் போக்க வேண்டும். இந்த பிணிகள் பல வகை: உடல், உளம், ஆன்மா சார்ந்த எல்லாவித ஊனங்களும் குறைபாடுகளும் ''பிணிகள்'' எனலாம். கொடிய வறுமையில் வாடுவோர், சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோர், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் ஆகிய எல்லா மக்களுமே ஒருவிதத்தில் ''பிணி''களால் அவதிப்படுகிறவர்களே. இவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் அறிவிக்கும் நற்செய்தி என்ன? எல்லாவித அநீதிகளிலிருந்தும் மக்களை விடுவிக்க இயேசு வந்தார் என்னும் நற்செய்தியை அறிவிக்காமல் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற இயலாது.

மேலும் இயேசு ''பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்'' என்றார் (லூக் 9:3). இந்த அறிவுரை இன்றைய வாழ்க்கைச் சூழமைவுகளுக்குப் பொருந்திப் போகாது என நாம் நினைக்கலாம். ஆனால் இயேசு வழங்கிய அறிவுரையின் உட்பொருளை நாம் மறந்துவிடலாகாது. இயேசுவின் பணியைத் தொடர்வோர் உலகப் பார்வையில் செயல்படாமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். அக்காலத்தில் பயணம் சென்றவர்கள் கைத்தடி வைத்துக்கொண்டார்கள். நடக்கும்போது ஊன்றிக்கொள்வதற்கும், வழிப்பறிக்காரர்களிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் அது பயன்பட்டது. பையில் உணவுப் பொருள் மற்றும் பணம் போன்றவற்றை வைத்திருந்தார்கள். மாற்று உடையாக ஓர் உள்ளாடையும் பயன்பட்டது. ஆனால் இயேசுவின் சீடர்கள் மற்ற வழிப்போக்கர்கள் போலத் தங்களைக் கருதாமல் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கடவுளையே நம்பியிருக்க வேண்டும். அதுபோல, வீடுவீடாகச் சென்று உதவி கேட்காமல் பிறர் கொடுப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டும். ஆக, பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டவர்கள் பிற பற்றுகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் கடவுளின் பணியை நன்முறையில் ஆற்ற இயலும் என்பது இன்று வாழும் நமக்கு விடப்படுகின்ற சவால்.

மன்றாட்டு:

இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் செயல்பட அருள்தாரும்.