யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-09-20




முதல் வாசகம்

பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6,10-13

மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும். மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள். திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார். ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும். பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
திருப்பாடல் 119: 1,27. 30,34. 35,44

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. ``உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:16)

திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்த நிலக்கிழார் வேலையாள்களைத் தேடிச்செல்கிறார். விடியற்காலையிலிருந்தே தொடங்கி, கதிரவன் மறையும் வரை வேலை செய்தவர்களும், காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி என வெவ்வேறு நேரங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். நாள் முழுதும் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் சம கூலி வழங்குவது சரியா என்னும் கேள்வி எழுகிறது. அப்போது நிலக்கிழார் கேட்ட கேள்வி: ''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' இயேசு கூறிய இந்த உவமையை வெவ்வேறு மட்டங்களில் விளக்கிப் பொருள் உரைக்கலாம். அக்காலத்தில் நிலவிய சமூக-பொருளாதார பழக்கவழக்கங்களின் பின்னணியில் இந்த உவமையைப் பார்க்கலாம். அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற கூலியைக் கொண்டுதான் வேலையாள்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பெரிய நிலங்களை உடைமையாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். கடவுளாட்சி பற்றி இயேசு இந்த உவமையைக் கூறியதால் அந்த ஆட்சியில் புகுவதற்கு அழைப்புப் பெற்றவர்கள் சிலர் முதலிலும் வேறு சிலர் வெகு நாள்கள் கடந்தும் நுழைந்திருக்கலாம். இஸ்ரயேலர் முதலில் வந்தனர், பிற இனத்தார் வந்துசேர நேரம் பிடித்தது. ஆனால், தம் ஆட்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் கடவுள் வழங்குகின்ற கொடை ஒரே தன்மையதுதான். காலையிலிருந்தே உழைத்த இஸ்ரயேலருக்கும், மாலை ஐந்து மணிக்கு வேலையில் சேர்ந்த பிற இனத்தாருக்கும் ஒரே கூலிதான். ஆனால், பின்னால் வந்தவர்களுக்கும் முன்னால் வந்தவர்களுக்கும் ஒரே சம ஊதியமே வழங்கும் கடவுள் நீதியின்றி செயல்படவில்லையா?

கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் தாராள அன்பைக் கண்டு குறைகூறுவோர் உண்டு. அதாவது, அளவுக்கு மிஞ்சிய தாராளத்தைக் கடவுள் காண்பிப்பதால் அவர் அநீதியாக நடக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவர். கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது.

மன்றாட்டு:

இறைவா, அன்பில் தோய்ந்த நீதிமுறையை நாங்கள் கடைப்பிடித்து வாழ அருள்தாரும்.