யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
பொதுக்காலம் 24வது வாரம் புதன்கிழமை
2022-09-14

திருச்சிலுவையின் மகிமை விழா




முதல் வாசகம்

கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.
திருப்பாடல் 78: 1-2. 34-35. 36-37. 38 (

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். பல்லவி

34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். 35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். பல்லவி

36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். 37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. பல்லவி

38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?'' (மத்தேயு 18:21)

மன்னிப்பு என்பது எளிதில் நிகழும் காரியம் அல்ல. சாதாரண மனித இயல்பைப் பார்த்தால் நமக்கு எதிராக யாராவது தீங்கிழைக்கும் வேளையில் அவர்ளை உடனடியாகத் தண்டிக்கத்தான் மனம் வரும்; அல்லது பழிக்குப் பழி என்னும் எண்ணம் நம்மை ஆட்கொண்டுவிடும். எனவே, பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழுகின்ற, எழக் கூடுமான கேள்வியே என்றால் மிகையாகாது. எத்தனை முறை மன்னிப்பது என்று பேதுரு கேட்ட கேள்விக்கு இயேசு வழங்கிய பதில் என்ன? ''ஏழுமுறை மட்டும் மன்னித்தால் போதாது; ஏழுபது தடவை ஏழுமுறை நீ மன்னிக்க வேண்டும்'' (காண்க: மத் 18:23). இதை விளக்கிட இயேசு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். மிகப் பெரிய தொகையைக் கடனாக வாங்கிய ஒருவருடைய முழுக்கடனும் மன்னிக்கப்பட்டது. ஆனால் அவரோ தன்னிடமிருந்து மிகச் சிறிய தொகை கடனாகப் பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார். பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளும் நமக்கு மன்னிப்பு அருளமாட்டார் என இயேசு இக்கதை வழி நமக்குப் போதிக்கிறார் (மத் 18:21-35).

மன்னிப்பு அன்பின் உயரிய வெளிப்பாடு. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் நன்மை செய்ய விரும்புவது இயல்பு. ஆனால் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்வது கடினமான செயல். நம் உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால்தான் நாம் பிறரை மன்னிக்க முன்வருவோம். கடவுள் நம் பாவங்களையும் குற்றங்களையும் மன்னிக்கிறார். ஆனால், நாம் பிறருக்கு மன்னிப்பு வழங்க மறுத்தால் கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது முரண்பாடாகத்தானே இருக்கும்! கடவுளிடம் மன்னிப்புக் கேட்போர் பிறரையும் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது இயேசு பேதுருவுக்கு வழங்கிய பதில் நமக்கும் பொருத்தமாக அமையும். அதாவது எத்தனை தடவை மன்னிப்பது என நாம் விரல்விட்டு எண்ணிப் பார்க்காமல் எப்போதெல்லாம் பிறர் நமக்குத் தீங்கு இழைக்கின்றனரோ அப்போதெல்லாம் மனமுவந்து மன்னித்திட முன்வர வேண்டும். இத்தகைய தாராள மனம் இயேசுவிடம் இருந்தது. சிலுவையில் தொங்கிய வேளையிலும் அவர், ''தந்தையே, இவர்களை மன்னியும்'' (லூக்கா 23:34) என்று மன்றாடியதுபோல நாமும் உளமார மன்னிப்போம்.

மன்றாட்டு:

இறைவா, மன்னிக்கும் மனப்பான்மை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.