யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2022-08-28

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:17-18,20,28-29,திருப்பாடல்கள் 68: 3-4. 5-6. 9-10,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 22-24,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-14)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கைம்மாறுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து கிடைக்கும் கைம்மாறுக்காக பணிவோடும், பெருந்தன்மையோடும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கி றது. தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்று இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார். பணத்தையும், பதவியையும், புகழையும் விரும்பித் தேடாமல், தாழ்ச்சியோடு வாழுமாறு ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இருப்பவர்களோடு உறவு பாராட்டுவதைக் காட்டிலும் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வதற்கு முதலிடம் அளிக்குமாறு நாம் அழைக்கப்படுகிறோம். பணிவும், பகிர்வும் நிறைந்த வாழ்வு மூலம், கடவுள் தரும் கைம்மாறைப் பெற்று மகிழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:17-18,20,28-29

குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்;
திருப்பாடல்கள் 68: 3-4. 5-6. 9-10

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4 கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6 தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்;
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 22-24

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-14

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர். '' பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கைம்மாறு அளிப்பவரே இறைவா,

உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்களுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே,

எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை நாங்கள் எதிர்பார்க்காமல், பிறருக்கு நாங்கள் வழங்குகின்ற நல்ல மனதை எங்களுக்குத் தந்தருள உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனை களால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம் பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு அளிப்பவரே இறைவா,

உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

செயல்வழிக் கற்பித்தல் !

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்;வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார். ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார். நலப்படுத்திய தனது செயலையும் நியாயப்படுத்துகிறார். அவரது பேச்சிலும், செயலிலும் உள்ள நியாயத்தை உணர்ந்த அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது. நாம் பிறருக்குப் போதிக்க விரும்பும் நல்ல மதிப்பீடுகளை நாம் கடைப்பிடித்து, அதன்வழி செயல்வழிக் கற்பித்தலை நாமும் செயல்படுத்தலாமே.

மன்றாட்டு:

நல்ல ஆசிரியரான இயேசுவே, செயல்வழி நீர் தந்த பரிவின் முதன்மை என்னும் பாடத்திற்காக நன்றி கூறுகிறேன். அனைத்திற்கும் மேலாக அன்பும், பரிவுமே உயர்ந்தது என்பதை நான் உணர எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.