யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2022-08-14

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10,திருப்பாடல்கள் 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b),எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

பிரிக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவருக்கு உரியவர்களாக தனித்துவத்துடன் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் இந்த உலகிற்கு உரியவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, விண்ணக வாழ்வுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை முழுமையாக உணர அழைக்கப்படுகிறோம். கடவுளின் விருப்பப்படி, இவ்வுலகின் தீமைகளில் இருந்து விலகி வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்தொடரவே நாம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் தலைவராகிய இயேசு இவ்வுலகில் மூட்ட வந்த தீயைப் பற்றியெரியச் செய்பவர் களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10

அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, ``இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை'' என்றார்கள். அதற்கு அரசன் செதேக்கியா, ``நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே'' என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார். எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, ``என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது'' என்று கூறினார். அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, ``உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு'' என்று கட்டளையிட்டான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
திருப்பாடல்கள் 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b)

1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி

2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி

3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி

17 நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

இரண்டாம் வாசகம்

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் தலைவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உண்மையுள்ள பணியாளர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் உமது திருவுளப்படி வழிநடத்தவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,

உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர்களையும், அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனை களால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம் பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு அளிப்பவரே இறைவா,

உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (லூக்கா 12:51)

இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர் உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.

ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்'' (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: ''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, உண்மையான அமைதியை உம்மில் கண்டுகொள்ள அருள்தாரும்.