யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-08-12
முதல் வாசகம்

என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15,60,63

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள். நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய். ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, `வாழ்ந்திடு' என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, `வாழ்ந்திடு' என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன். அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய். உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய். ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் சினம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளீர்.
எசா 12: 2-3. 4. 5-6

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். பல்லவி

4உன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், ``ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டனர். அவர் மறுமொழியாக, ``படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?'' என்று கேட்டார். மேலும் அவர், ``இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ``அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?'' என்றார்கள். அதற்கு அவர், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, ``கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது'' என்றார்கள். அதற்கு அவர், ``அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கச் சொல்கிறேன்' என்றார்}} (மத்தேயு 18:20)

இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று வாழ்கின்ற மக்கள் குழு திருச்சபை. இது இயேசுவின் போதனையைப் பிரமாணிக்கமாகப் பின்பற்ற அழைக்கப்படுகின்ற மக்கள் குழுவாகத் திகழ்கிறது. இச்சபையின் சிறப்புப் பண்புகள் யாவை என மத்தேயு பல இடங்களில் விளக்குகிறார். இயேசுவின் திருச்சபையில் நிலவ வேண்டிய ஒரு முக்கியமான பண்பு ''பாவ மன்னிப்பு'' ஆகும். கடவுளுக்கோ மனிதருக்கோ எதிராகச் செய்யப் படுகின்ற பாவங்கள் கிறிஸ்தவ சமூகத்தை உள்ளிருந்தே கொல்கின்ற சக்தி வாய்ந்தவை. எனவே, குற்றம் செய்வோரைத் திருத்தி நல்வழிப்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை (காண்க: மத் 18:15-18).

திருச்சபைக்குள் நிலவ வேண்டிய ஒற்றுமை பல நிலைகளில் வெளிப்பட வேண்டும். இறைவழிபாட்டுக்காகக் கூடி வருகின்ற திருச்சபையில் இந்த ஒற்றுமை தோன்றும். எனவே, ஒருமித்த மனத்தோடும் ஒத்த கருத்தோடும் இறைவனை வேண்டும்போது நம் வேண்டுதல் கேட்கப்படும். இயேசுவின் பெயரால் நாம் ஒன்றுகூடி வரும்போது நம்மிடையே அவரும் உடனிருப்பார் (மத் 18:20). இந்த வாக்குறுதி உயிர்த்தெழுந்த இயேசு தம் திருச்சபையோடு இருந்து அதை வழிநடத்துவதைக் குறிப்பதாக மத்தேயு நற்செய்தியின் இறுதியில் காண்கின்றோம். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு வாக்களித்துள்ளார் (மத் 28:20). அதுபோலவே மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இயேசுவின் பிறப்பின்போது அவர் ''இம்மானுவேல்'' (அதாவது ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'') என அறிமுகப்படுத்தப்படுகிறார் (மத் 1:23). ஆக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைத்திலும் ஒன்றித்திருந்து, ஒற்றுமையோடு செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிளவுகள் தோன்றினாலும் அவற்றைப் போக்குவதற்கான வழிகளைத் தேட வேண்டும்; அன்பும் மன்னித்து ஏற்கும் பண்பும் நம்மில் மிளிர வேண்டும். அப்போது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் ஒற்றுமையை வளர்க்க அருள்தாரும்.