யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் வியாழக்கிழமை
2022-08-11

புனித மாக்மில்லியன் மரிய கோல்பே
முதல் வாசகம்

கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார். மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறொர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம். நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு. அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய். அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச் செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.'' எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப் படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன். காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், `நீ செய்கிறது என்ன?' என்று கேட்கவில்லையா? நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப் பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர். அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக் கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.
திருப்பாடல்78: 56-57. 58-59. 61-62

56 ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை. 57 தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். -பல்லவி

58 தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர். 59 கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். -பல்லவி

61 தம் வலிமையை அடிமைத்தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்; 62 தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச் சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21 - 19: 1

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ``ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?'' எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ``ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்' என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ``பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கச் சொல்கிறேன்' என்றார்}} (மத்தேயு 18:20)

இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று வாழ்கின்ற மக்கள் குழு திருச்சபை. இது இயேசுவின் போதனையைப் பிரமாணிக்கமாகப் பின்பற்ற அழைக்கப்படுகின்ற மக்கள் குழுவாகத் திகழ்கிறது. இச்சபையின் சிறப்புப் பண்புகள் யாவை என மத்தேயு பல இடங்களில் விளக்குகிறார். இயேசுவின் திருச்சபையில் நிலவ வேண்டிய ஒரு முக்கியமான பண்பு ''பாவ மன்னிப்பு'' ஆகும். கடவுளுக்கோ மனிதருக்கோ எதிராகச் செய்யப் படுகின்ற பாவங்கள் கிறிஸ்தவ சமூகத்தை உள்ளிருந்தே கொல்கின்ற சக்தி வாய்ந்தவை. எனவே, குற்றம் செய்வோரைத் திருத்தி நல்வழிப்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை (காண்க: மத் 18:15-18).

திருச்சபைக்குள் நிலவ வேண்டிய ஒற்றுமை பல நிலைகளில் வெளிப்பட வேண்டும். இறைவழிபாட்டுக்காகக் கூடி வருகின்ற திருச்சபையில் இந்த ஒற்றுமை தோன்றும். எனவே, ஒருமித்த மனத்தோடும் ஒத்த கருத்தோடும் இறைவனை வேண்டும்போது நம் வேண்டுதல் கேட்கப்படும். இயேசுவின் பெயரால் நாம் ஒன்றுகூடி வரும்போது நம்மிடையே அவரும் உடனிருப்பார் (மத் 18:20). இந்த வாக்குறுதி உயிர்த்தெழுந்த இயேசு தம் திருச்சபையோடு இருந்து அதை வழிநடத்துவதைக் குறிப்பதாக மத்தேயு நற்செய்தியின் இறுதியில் காண்கின்றோம். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு வாக்களித்துள்ளார் (மத் 28:20). அதுபோலவே மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இயேசுவின் பிறப்பின்போது அவர் ''இம்மானுவேல்'' (அதாவது ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'') என அறிமுகப்படுத்தப்படுகிறார் (மத் 1:23). ஆக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைத்திலும் ஒன்றித்திருந்து, ஒற்றுமையோடு செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிளவுகள் தோன்றினாலும் அவற்றைப் போக்குவதற்கான வழிகளைத் தேட வேண்டும்; அன்பும் மன்னித்து ஏற்கும் பண்பும் நம்மில் மிளிர வேண்டும். அப்போது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் ஒற்றுமையை வளர்க்க அருள்தாரும்.