யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் திங்கட்கிழமை
2022-08-08

புனித கிளாரா
முதல் வாசகம்

ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சியை நான் கண்டேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 1: 2-5, 24-28

யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு - கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது. நான் உற்றுப் பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப் பிழம்பையும், அத்தீப் பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன். அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது. அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப் படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன. அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது. அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும், நெருப்பு சூழ்ந்திருப்பது போன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன். சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

வானமும் வையமும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.
திருப்பாடல் 148: 1-2. 11-12. 13-14

விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். பல்லவி

11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, 12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். பல்லவி

13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. 14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். அல்லேலூயா! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27

அக்காலத்தில் கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, ``உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?'' என்று கேட்டனர். அவர், ``ஆம், செலுத்துகிறார்'' என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, ``சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?'' என்று கேட்டார். ``மற்றவரிடமிருந்துதான்'' என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், ``அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞசி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினானார்'' (மத்தேயு 14:29-30)

இயேசு இயற்கை சக்திகளையும் அடக்குகின்ற வல்லமை கொண்டவர் என்பதை மத்தேயு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார் (மத் 8:23-27). திடீரெனக் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் படகைக் கவிழ்க்கவிருந்த வேளையில் இயேசு காற்றையும் கடலையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். பின்னர் ஒரு சில அப்பங்களையும் மீனையும் கொண்டு ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்தார் (மத் 14:13-21). இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இயேசு கடல்மீது நடந்து சென்ற அதிசயத்தை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 14:22-33). மாற்குவில் வரும் பாடத்திற்கும் மத்தேயுவின் பாடத்திற்கும் இடையே உள்ள ஒரு பெரிய வேறுபாடு பேதுரு கடலில் நடக்கும் நிகழ்ச்சியாகும். மத்தேயு பொதுவாக இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குறைந்தவர்கள்'' எனக் குறிப்பிடுவார். இங்கேயும் பேதுரு நம்பிக்கை குறைந்தவராக நடப்பதைக் காண்கிறோம். அதே நேரத்தில் பேதுரு துணிச்சல் மிக்கவர் கூட. கடலில் நடந்துசெல்ல இயேசு அனுமதி தர வேண்டும் எனக் கேட்கின்ற மன உறுதி அவரிடம் இருந்தது. ஆனால் அவர் தம்மை முழுவதுமாக இயேசுவிடம் கையளிக்கவில்லை. அதாவது, அவர் இயேசிடம் கொண்ட நம்பிக்கை ''குறைவுள்ளதாக'' இருந்தது. இந்த நம்பிக்கைக் குறைவின் காரணமாகப் பேதுரு கடலில் மூழ்கப் போனார். அவ்வாறு மூழ்கிக் கொண்டிருக்கும்போதே அவருடைய இதய ஆழத்திலிருந்து எழுகிறது ஒரு மன்றாட்டு: ''ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்பதே அம்மன்றாட்டு (மத் 14:30). இங்கே நாம் கருதத்தக்க கூறுகள் பல உண்டு. முதலில் பேதுருவின் கதை அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு தனியார் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல. பேதுரு இயேசுவின் சீடர்களின் பிரதிநிதியாக இவண் வருகின்றார். அவருடைய நம்பிக்கைக் குறைவு இயேசுவின் சீடர்களாகிய நம்மில் சில வேளைகளில் எழுகின்ற நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது. நாமும் இயேசுவிடத்தில் முழு நம்பிக்கை கொள்ளாத வேளைகளில் ஆபத்து நம்மை மூழ்கடிக்க முயல்வதுண்டு; துன்பங்கள் எழுந்து நம்மை அமிழ்த்திவிட முனைவதுண்டு. அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் நம்பிக்கை இழக்காமல் கடவுளை நோக்கி உதவி நாடி நம் மன்றாட்டை எழுப்பிட வேண்டும். பேதுரு இயேசுவை ''ஆண்டவர்'' என அழைத்தது இயேசுவிடத்தில் அவர் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதைக் கண்டார் என்பதைக் காட்டுகிறது.

தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு ''உடனே தம் கையை நீட்டிப் பிடிக்கிறார்'' (காண்க: மத் 14:31). நோயாளிகளைத் தொட்டுக் குணமாக்கிய இயேசுவின் செயல் இது. இங்கே இயேசு பேதுருவின் நம்பிக்கையின்மையை ஒருவிதத்தில் ''குணப்படுத்துகிறார்''. ஆனால் நலம் கொணர்கின்ற இயேசு நமக்கு மீட்பு அளிக்கிறார் என்பதே இங்கே நாம் காண்கின்ற ஆழ்ந்த உண்மை. நம் உள்ளத்தில் ஐயம் எழுகின்ற வேளைகளில் நாம் நம்பிக்கையோடு கடவுளையும் அவர் நம்மை மீட்க அனுப்பிய இயேசுவையும் அணுகிச் சென்றால் தூய ஆவியின் அருளால் நமது நம்பிக்கை மீண்டும் உறுதியாகும். நாமும் நலம் பெற்று மீட்பில் பங்கேற்போம்.

மன்றாட்டு:

இறைவா, துன்பங்கள் எழுந்து எங்களை அழுத்துகின்ற வேளைகளில் எங்களைக் கைதூக்கி விடுபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.