யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-08-02

புனித மரியாளின் பேராலய நேர்ந்தளிப்பு
முதல் வாசகம்

உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2,12-15,18-22

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன். ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள் மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில், என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
திருப்பாடல் 102: 15-17. 18-20. 28,21-22

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்."

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2,10-14

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, ``உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே'' என்றனர். மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, ``நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்'' என்றார். பின்பு சீடர் அவரை அணுகி, ``பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?'' என்றனர். இயேசு மறுமொழியாக, ``என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!

பாலை நிலத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் என்று ஆலோசனை கூறிய சீடருக்கு இயேசு தந்த இந்தப் பதில் மொழி அவர்களுக்கு நிச்சயம் வியப்பைத் தந்தது. எனவேதான், எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கொடுத்தனர்.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளை சீடருக்கும், நமக்கும் இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது;

பரிவின் வெளிப்பாடாக பகிர்வு அமைய வேண்டும். இயேசு திரளாகக் கூடியிருந்த மக்கள்மீது பரிவு கொண்டார். நோயுற்றோரைக் குணமாக்கினார், ஆறுதல் நிறைந்த வார்த்தைகளைப் போதித்தார். அத்துடன் அவரது பரிவு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று விரும்பினார். இந்த மனநிலையைத் தம் சீடருக்கும் கற்றுக்கொடுக்கிறார். உங்கள் பரிவு சொற்களில் மட்டுமல்ல, செயலிலும் இருக்கட்டும். குறிப்பாக, உணவு, உடை, உறைவிடம் இன்றித் தவிப்போருக்கு உதவுங்கள். அதுவும் உங்கள் பணியே என்று அறிவுறுத்துகிறார்.

உங்களிடம் என்ன இல்லை என்று பார்ப்பதைவிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் பணிக்கின்றார் இயேசு. என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு அற்புதங்களைச் செய்ய வல்லவர் இறைவன் என்று கற்றுத் தருகிறார். எனவே, என்ன செய்யலாம் என்று மலைக்காமல், என்ன இருக்கிறதோ அதை இறைவன் கையில் தந்தால், அவர் வியப்புக்குரிய வகையில் அதைப் பலுகச் செய்வார்.

மன்றாட்டு:

அன்பின்; திருவுருவே இயேசுவே, நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் உமது கட்டளைக்காக இன்று நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழும் இல்லாதவர்களுக்கு உணவும், மாண்பும் வழங்கும் பொறுப்பை நீர் எங்களுக்கே தந்திருக்கிறீர். இந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களிடம் என்ன உள்ளதோ - செல்வம், ஆற்றல்கள், திறமைகள், நேரம் - அதை உமது பாதங்களில் ஒப்புக்கொடுக்கும் தாராள மனத்தை எங்களுக்குத் தாரும். அவ்வாறு நாங்கள் செய்தால், நீர்; அற்புதங்களைச் செய்ய வல்லவர் என்ற விசுவாசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.