யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் திங்கட்கிழமை
2022-08-01

புனித ஜோன் மரிய வியான்னி
முதல் வாசகம்

அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 28: 1-17

யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது: ``இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: `பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்து விட்டேன். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன். அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்துக்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்.'' அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார். இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, `ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக! ஆயினும் உம் செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும். உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவை பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர். நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்'' என்றார். அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான். மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், ``ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்'' என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார். இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: ``நீ போய் அனனியாவிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்துகொள்வாய். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்.'' அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: ``அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய். எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப் போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!'' அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
திருப்பாடல் 14: 22-36 119: 29,43. 79,80. 95,102

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். பல்லவி

79 உமக்கு அஞ்சி நடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவாராக! 80 உம் நியமங்களைப் பொறுத்த மட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன். பல்லவி

95 தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன். 102 உம் நீதிநெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

அக்காலத்தில் இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ``ஐயோ, பேய்'' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ``துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, ``ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்'' என்றார். அவர், ``வா'' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ``ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ``நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ``உண்மையாகவே நீர் இறைமகன்'' என்றனர். அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!

பாலை நிலத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் என்று ஆலோசனை கூறிய சீடருக்கு இயேசு தந்த இந்தப் பதில் மொழி அவர்களுக்கு நிச்சயம் வியப்பைத் தந்தது. எனவேதான், எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கொடுத்தனர்.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளை சீடருக்கும், நமக்கும் இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது;

பரிவின் வெளிப்பாடாக பகிர்வு அமைய வேண்டும். இயேசு திரளாகக் கூடியிருந்த மக்கள்மீது பரிவு கொண்டார். நோயுற்றோரைக் குணமாக்கினார், ஆறுதல் நிறைந்த வார்த்தைகளைப் போதித்தார். அத்துடன் அவரது பரிவு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று விரும்பினார். இந்த மனநிலையைத் தம் சீடருக்கும் கற்றுக்கொடுக்கிறார். உங்கள் பரிவு சொற்களில் மட்டுமல்ல, செயலிலும் இருக்கட்டும். குறிப்பாக, உணவு, உடை, உறைவிடம் இன்றித் தவிப்போருக்கு உதவுங்கள். அதுவும் உங்கள் பணியே என்று அறிவுறுத்துகிறார்.

உங்களிடம் என்ன இல்லை என்று பார்ப்பதைவிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் பணிக்கின்றார் இயேசு. என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு அற்புதங்களைச் செய்ய வல்லவர் இறைவன் என்று கற்றுத் தருகிறார். எனவே, என்ன செய்யலாம் என்று மலைக்காமல், என்ன இருக்கிறதோ அதை இறைவன் கையில் தந்தால், அவர் வியப்புக்குரிய வகையில் அதைப் பலுகச் செய்வார்.

மன்றாட்டு:

அன்பின்; திருவுருவே இயேசுவே, நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் உமது கட்டளைக்காக இன்று நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழும் இல்லாதவர்களுக்கு உணவும், மாண்பும் வழங்கும் பொறுப்பை நீர் எங்களுக்கே தந்திருக்கிறீர். இந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களிடம் என்ன உள்ளதோ - செல்வம், ஆற்றல்கள், திறமைகள், நேரம் - அதை உமது பாதங்களில் ஒப்புக்கொடுக்கும் தாராள மனத்தை எங்களுக்குத் தாரும். அவ்வாறு நாங்கள் செய்தால், நீர்; அற்புதங்களைச் செய்ய வல்லவர் என்ற விசுவாசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.