யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-07-29




முதல் வாசகம்

9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்
1யோவான் 4;7-16

7 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். 8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். 9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. 10 நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. 11 அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 12 கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். 13 அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்எனவும் அறிந்து கொள்கிறோம். 14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். 15 இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். 16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
திருப்பாடல்கள் 34;1-10

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.பல்லவி r>
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.பல்லவி 3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். r>
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். r>
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லைபல்லவி. r>
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.பல்லவி r>
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம்புகுவோர்பேறுபெற்றோர.பல்லவி r>
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராதுபல்லவி. r>
10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி r>


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11;19-27

அக்காலத்தில்9 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21 மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார். 23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். 24 மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார். 25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' 27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

".. ..என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."

மரண பயம் யாருக்கு? சாவைச் சந்திப்பவனுக்கா? அருகில் இருப்பவனுக்கா? சாவைச் சந்திப்பவன்கூட பயப்படுவதில்லை. அவர்கள் மறை சாட்சிகள், கொள்கை வீரர்கள். புனிதர்கள், புலிகள். சில தொண்ணூறுகளும் சாவைக்கண்டு பயப்படுகிறது. வேறு சில இருபதுகள் கொள்கைக்காகச் சாவைத் தேடிச் செல்கிறது. கூட இருந்தவனுக்குப் பயம். அடடே இவனை நம்பி இருந்தேனே, எல்லாம் முடிந்துவிட்டதே. இப்படி திடுதிப்பென்று போய்விட்டானே. பாவத்தில் வாழ்பவனும், அருள் நிலை இழந்தவனும்,கொள்கை இல்லாதவனும் இந்த சாவைக்கண்டு பயந்து தினமும் செத்துக்கொண்டிருக்கும் நடை பிணங்கள். உண்மையைச் சொல்ல பயம், நியாயத்தை பேச பயம். தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்குக் கவசத்திற்காகக் கல்லறையை தேர்ந்துகொண்ட புத்திசாலிகள். "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்னும் நம்பிக்கை வார்த்தைகளால் மரணத்திற்கு உயிர்ப்பு கொடுக்கிறார் இயேசு. சிலரை இந்தச்சமுதாயம் வாழவிடாமல் கட்டி, அடக்கி, அமிழ்த்தி, பெருஞ்சுமையைப் புரட்ட முடியாப் பாராங்கல்லாய் வைத்து சமாதியாக்கிவிடுகிறது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்"என்று மீண்டும் ஒரு வாழ்வை வழங்குகிறார் இயேசு.

இன்று இறப்புக்கள் பல விதம். உடலின் உயிர் பிரிவது ஒரு இறப்பு. உன்னில் ஆன்மீகம் அழிவதும் இறப்பு. அறிவு அழிவதும் இறப்பு. நற்பண்பு, அறநெறி,பண்பாடு,கலாச்சாரம் அழிவதும் இறப்பு, பொருளாதாரம் பற்றாக்குறை ஏற்படுவதும் இறப்பு. இந்த அழிவுகளால் எல்லாம் முடிந்துவிட்டது. நான்கு நாட்களாகிவிட்டது, நாற்றமடிக்குமே என்று நைந்துவிட அவசியமில்லை. நம்பிக்கையுடையவன் இதை புது வாழ்வுக்குச் சாதகமாக்கிக்கொள்கிறான். குழந்தை இளைஞனாகும்போது குழந்தை தன்மை அழிவது இறப்பு அல்ல, வளர்ச்சியின் ஒரு கட்டம். இளம்பெண் தாயாவது அழிவு அல்ல, புது வாழ்வின் ஒருபடி. ஆகவே இறப்பு என்பது புதிய ஒன்றை உருவாக்கும் பாதை. இறப்பையும் இழப்பையும் தாண்டி புது வாழ்வைப் பெறுவதுதான் இயேசு கற்றுத்தந்த வாழ்க்கைத் தத்துவம்.இதை நம்பி, இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே, நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.