யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வியாழக்கிழமை
2022-07-28

புனித லொயலா இஞ்ஞாசியார்




முதல் வாசகம்

குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6

எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: ``நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.'' எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: ``இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 146: 1-2. 3-4. 5-6

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். பல்லவி

3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம். 4 அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்" (மத்தேயு 13:44)

கடவுளாட்சி எத்தகையது என்று விவரிக்க இயேசு கூறிய ஒரு சிறிய உவமை "மறைந்திருந்த புதையல்" பற்றியதாகும். இந்த உவமையில் வருகின்ற அடிப்படைக் கருத்தை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் நாம் எதிர்பாராமலே சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதுண்டு. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்வதற்காகத்தான் அந்த மனிதர் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ எக்காலத்திலோ புதைத்துவைத்த புதையல் அவருடைய கண்களுக்குத் தென்பட்டது. திட்டமிட்டுத் தேடிச் சென்று கண்டுபிடித்த புதையல் அல்ல அது. மாறாக, எதிர்பாராவண்ணம் அவரைத் தேடி வந்த செல்வம் அது. பிறருடைய பொருளை அவருடைய இசைவின்றி எடுத்துக்கொள்வது தவறு என்பதை இவண் சுட்டிக்காட்டவேண்டும். எனவே, எதிர்பாராமல் வந்த புதையலை, வேறு யாருக்கோ சொந்தமான புதையலை, அந்த மனிதர் தமக்கென்று எடுத்துக்கொண்டது சரியல்ல என நாம் வாதாடலாம். அதே நேரத்தில், நமது சொந்த முயற்சியால், நமது உழைப்பால் உருவாகாத செல்வங்கள் நம்மைத் தேடிவருவதும் உண்டு. அப்போது அச்செல்வத்தை நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொண்டு, நன்மை செய்ய அதைப் பயன்படுத்துவது நலமான செயலே எனலாம்.

நம்மைத் தேடிவரும் செல்வம் யாது? கடவுள் நமக்கு இயல்பாகவே வழங்கியுள்ள கொடைகளை நாம் நினைத்துப் பார்க்கலாம். அனைத்திற்கும் அடிப்படை, கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்துக் காத்துவருதாகும். நம்மை அன்போடு ஏற்றுப் பேணுகின்ற மனிதரைப் பெற்றோராக, நண்பராக நாம் பெறுவதும் கடவுளின் கொடையே. கடவுள் நம்மைக் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டதும் கொடையே. இவ்வாறு நம்மைத் தேடிவருகின்ற செல்வங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவேளைகளில் நமக்குள்ளேயே மறைந்திருக்கின்ற புதையல்களும் உண்டு. நம்மில் புதைந்துகிடக்கின்ற திறமைகள் ஏராளம். காலப் போக்கில் நமது கவனக்குறைவால் புதைந்துபோகின்ற கொடைகளும் உண்டு. அவற்றைத் தோண்டி வெளிக்கொணர்ந்து, உலகம் வாழப் பயன்படுத்துவது சிறப்பு. பிறர் தம் திறமைகளைக் கண்டுகொள்ள நாம் அவர்களுக்குத் துணைசெய்யலாம் என்பதையும் இவண் குறிப்பிடலாம். ஆக, "மறைந்திருக்கும் புதையல்" அப்படியே மறைந்திருந்தால் அதனால் யாருக்கும் பயனிராது. மாறாக, அப்புதையலை நாம் வெளிக்கொணர்ந்து, அதைப் பயன்படுத்தி நல்லது செய்தால் அது நமக்கும் நலம் பயக்கும், பிறருக்கும் பயனுடையதாகும். அப்போது, கடவுளின் கொடை வீணாகப் போகாமல் கடவுளின் மாட்சியைப் பறைசாற்ற நமக்குத் தூண்டுதலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் கண்டுபிடிக்கும் வண்ணம் எங்கள் வாழ்வில் புதையல்களை மறைத்துவைத்ததற்கு நன்றி!