யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-07-19

புனித மகதலா மரியா
முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன். உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
திருப்பாடல் 85: 1-3. 4-5. 6-7

ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர். 2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். 3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர். கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். பல்லவி

4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும். 5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? பல்லவி

6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ? 7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.''

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

'ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' (மத்தேயு 13:28)

நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது.

கிறிஸ்தவ சமயம் இக்கேள்விக்குத் தருகின்ற பதில் என்ன? தீமை இவ்வுலகில் தோன்றுவதற்குக் காரணம் தொடக்க காலத்தில் மனித வரலாற்றில் நுழைந்துவிட்ட பாவம்தான். முதல் மனிதர் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்கள் வழியாகப் பாவம் உலகில் நுழைந்து வரலாற்றில் எல்லா மனிதர்களையும் பாதித்துவிட்டது. உலகில் நிலவும் பாவம் மனித உள்ளத்தில் பாவ நாட்டமாகத் தோன்றுகிறது; மனிதருக்கும்; கடவுளுக்குமிடையே உள்ள உறவினை முறிக்க பாவம் முயல்கிறது. என்றாலும், அறுவடைக் காலத்தில் நல்ல பயிரும் களைகளும் அடையாளம் காணப்பட்டு நல்ல பயிர் களஞ்சியத்தில் சேர்க்கப்பட, களை தீயிலிட்டு எரிக்கப்படுவது போல, மனித வரலாற்றின் இறுதியில் பாவம் என்னும் தீமையும் அதன் விளைவுகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, நன்மை வெற்றி பெறும். நன்மையே உருவான கடவுள் நம்மைத் தம்மோடு நிலையான அன்புறவில் இணைத்துக்கொள்வார். கிறிஸ்துவின் சிலுவைச் சாவினால் நாம் புத்துயிர் பெற்று, நல்ல பயிரைப் போல நற்பயன் நல்குவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உமது வார்த்தையாகிய நல்ல விதையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் வளர்ந்து, முதிர்ந்து உலகின் வாழ்வுக்காக நற்பயன் நல்கிட அருள்தாரும்.