யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
2022-07-17

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;1-10,திருப்பாடல்கள் 15;2-5,திருத்தூதர் பவுல் கொலேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1;24-28,புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 10;38-42)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைவார்த்தைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனை நம் இல்லத்தில் வரவேற்று உபசரிக்கவும், அவரது வார்த்தையை பணிவுடன் கேட்கவும் நம்மை தயாரிக்குமாறு இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது. நற்கருணை வடிவில் நம்மைத் தேடி வரும் ஆண்டவரை நாம் எத்தகைய தயாரிப்போடு வரவேற்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நோயிலும், பசியிலும் வாடுவோரில் தம்மைக் கண்டு, உபசரிக்க இறைவன் நம்மை அழைக்கிறார். அதே நேரத்தில், இறைவனின் வார்த்தைக்கு முழுமையாக செவிகொடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு விரும்பும் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;1-10

அந்நாட்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார். "நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு" என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர்; "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
திருப்பாடல்கள் 15;2-5

2 மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். -பல்லவி

3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார்.
திருத்தூதர் பவுல் கொலேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1;24-28

சகோதர சகோதரிகளே! உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 10;38-42

அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாக்குறுதி தருபவராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது வாக்குறுதிக்கு தகுதி உள்ளவர்களாக வாழவும், மக்களை உம்மிடம் கொண்டு சேர்க்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,

உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர்களையும், அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பணியாற்ற அழைப்பவராம் இறைவா,

நாட்டில் ஏழ்மை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, போன்ற பல்வேறு பிரச் சனைகளால் கலங்கித் தவிப்போருக்கு உதவிபுரியும் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நல்ல நண்பரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது தூய ஆவியால் பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

மார்த்தாவும், மரியாவும் !

இயேசுவின் நண்பர்களான மார்த்தாவும், மரியாவும் பேறுபெற்றவர்கள். இயேசு எப்போதெல்லாம் ஓய்வெடுக்க விரும்பினாரோ, அப்போதெல்லாம் அவரைத் தம் வீட்டில் வரவேற்கும் பேறு பெற்றிருந்தனர். உரிமையுடன் இயேசுவை உபசரிப்பதிலும், அவரோடு தனியே உரையாடி, அவர் அமுத மொழிகளைக் கேட்கவும் கொடுத்து வைத்தவர்கள். இன்றைய வாசகத்தில் மார்த்தாவின் மன நிலையைக் கொஞ்சம் சிந்திப்போம். மார்த்தாவுக்கு நல்ல எண்ணம் இருந்தது. இயேசுவை நன்கு உபசரிக்க வேண்டும், அவருக்கு நன்கு பணிவிடை செய்ய வேண்டும். இந்த எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், அடுத்து அவர் செய்ததுதான் இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. மார்த்தா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த மரியா பற்றி இயேசுவிடமே உரிமையுடன் புகார் சொல்கின்றார். என்னைத் தனியே விட்டுவிட்டாள் என்ற குற்றச்சாட்டுடன், எனக்கு உதவி புரியும்படி சொல்லும் என்ற விண்ணப்பத்தையும் இயேசுவிடம் வைக்கிறார். இயேசு அவரது தவறான மனநிலையை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

நல்ல எண்ணம் கொண்டவர்களும் தவறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எனவே, நாம் கவனமோடு இருப்போம். பிறரது வழிபாட்டுப் பங்கேற்பு, ஆர்வங்கள் பற்றி அவசரப்பட்டு தீர்ப்பிட்டு விடாமலும், குற்றம் சுமத்தாமலும் நம்மைக் காத்துக்கொள்வோம். அத்துடன், வாழ்க்கையில் நல்ல பங்கு எது என்கிற தெளிவையும் கற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

நல்ல நண்பரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது துhய ஆவியால் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.