யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2022-07-10

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 30:10-14,திபா 69: 13. 16. 29-30. 35,36,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அடுத்திருப்பவர்களே, பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல்படுத்த இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. நம்மை நாமே நேர்மையாளர்களாக எண்ணிக் கொள்ளாமல், கடவுளின் முன்னிலையில் நாம் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். இயேசுவின் வழியில், கடவுளுக்கும் மற்ற மனிதர்களுக்கும் அடுத்திருப்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். எரிகோ செல்லும் பாதையில் அடிபட்டுக் கிடந்தவரை கண்டுகொள்ளாமல் சென்ற யூத குருவையும், லேவியரையும் போன்று மனிதநேயம் இல்லாதவர்களாய் நடந்துகொண்ட தருணங்களுக்காக மன்னிப்பு வேண்டுவோம். நல்ல சமாரியரைப் போன்று, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது:
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 30:10-14

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளை யும் நியமங்களையும் கடைப்பிடி உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.
ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. நாம் அதைக்கேட்டு, நிறைவேற்று மாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் ; என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறைவேற்று மாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் ; என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
திபா 69: 13. 16. 29-30. 35,36

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். -பல்லவி

ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். -பல்லவி

எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். -பல்லவி

கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணி லுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியா ளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக் காகப்படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணி லுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு இயேசு, திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வா யாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது ; என்றார். இயேசு, சரியாய்ச் சொன்னீர்: அப்படியே செய்யும்: அப்பொழுது வாழ்வீர் என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:
ஒருவர் எருசலேமி லிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ் வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, இவரைக் கவனித்துக் கொள்ளும்: இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன் என்றார்.
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், அவருக்கு இரக்கம் காட்டியவரே என்றார். இயேசு, நீரும் போய் அப்படியே செய்யும் என்று கூறினார்.என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணியாற்ற அழைப்பவராம் இறைவா,

உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு பிரமாணிக்கம் உள்ளவர்களாய் வாழ்ந்து, உமது திருவுளத்தை இம்மண்ணில் நிறைவேற்ற துணை நிற்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,

உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர்களையும், அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பணியாற்ற அழைப்பவராம் இறைவா,

நாட்டில் ஏழ்மை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, போன்ற பல்வேறு பிரச் சனைகளால் கலங்கித் தவிப்போருக்கு உதவிபுரியும் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா,

உலகெங்கும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாக மாற்றி உலகிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' (லூக்கா 10:29)

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ''நல்ல சமாரியர்'' என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ''உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?'' என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர்.

இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். அப்படியென்றால், இயேசு அறிவித்த அன்புக் கட்டளையின் பொருள் என்ன? ''உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக'' (லூக் 10:27; இச 6:5) என்னும் கட்டளையைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் கடமை உண்டு. யாருக்கு அன்புகாட்டுவது என்றொரு கேள்வி எழுப்புவதே முறையல்ல, ஏனென்றால் அன்பின் அரவணைப்பிலிருந்து விலகிநிற்போர் அல்லது விலக்கப்பட்டோர் ஒருவர்கூட இவ்வுலகில் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. எங்கு மனிதர் உள்ளனரோ அங்கு அன்புக் கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். அக்கட்டளைக்கு விதிவிலக்கு கிடையாது. எனினும், சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோர் நமது தனி அன்புக்கு உரித்தானவர் என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற போதனை. தன்னலம் கோலோச்சுகின்ற நம் சமுதாயத்தில் இது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்குக் காட்டிய அன்பை நாங்கள் எல்லா மனிதரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.