யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-07-01
முதல் வாசகம்

உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-6,9-12

வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: `நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக் கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்' என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: ``அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவது போல நீங்களும் புலம்புமாறு செய்வேன்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.'' தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: ``இதோ! நாள்கள் வரப் போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. ஒரு கடல் முதல் மறு கடல் வரை, வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடைய மாட்டார்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்.
திருப்பாடல் 119: 2,10. 20, 30. 40,131

2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். 10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். பல்லவி

20 எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது. 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். பல்லவி

40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும். 131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?' என்று கேட்டனர்'' (மத்தேயு 9:10-11)

மத்தேயு என்பவர் வரிதண்டும் தொழில் செய்துவந்தார் (காண்க: மத் 9:9; மாற் 2:13). அக்காலத்தில் வரிதண்டும் தொழில் இழிந்த ஒன்றாகக் கருதப்பட்டது. சமயப் பற்றுடைய யூதர்கள் வரிதண்டுவோரை வெறுத்து, ஒதுக்கினர். ஏனென்றால் வரிதண்டுவோர் பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய உரோமையரின் கைக்கூலிகளாகக் கருதப்பட்டனர். இவ்வாறு நாட்டுப் பற்றில்லாதது மட்டுமல்ல, அவர்கள் பிற இனத்தாரோடும் தம் தொழில் காரணமாக நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தனர். அவர்கள் நேர்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர். குறிக்கப்பட்ட தொகைக்கு மேலாக வரி பிரித்து அதைத் தங்களுக்கென வைத்துக்கொண்டார்கள் என மக்கள் அவர்கள்மேல் குற்றம் கண்டனர் (காண்க: லூக் 3:13). இவ்வாறு இழிவாகக் கருதப்பட்ட ஒரு வரிதண்டுபவரை இயேசு தம் சீடராக அழைத்தது மட்டுமல்ல, அவருடைய வீட்டுக்குச் சென்று விருந்து உண்ணவும் செய்கின்றார். மேலும் வேறு பல வரிதண்டுவோரும் இயேசுவோடு விருந்தில் அமர்கின்றனர். இன்னொரு ''தாழ்ந்த'' இனத்தவரும் இயேசுவோடு விருந்தில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் ''பாவிகள்'' என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் பிற இனத்தவர்களாக இருக்கலாம்; அல்லது யூத சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடிக்காத யூதராக இருக்கலாம்; அல்லது ''நேர்மையற்ற'' தொழில் செய்தவர்களாக இருக்கலாம் (எ.டு: வரிதண்டுதல், ஆடு மேய்த்தல், கம்பளிக்குச் சாயமேற்றுதல்). இத்தகைய ''தாழ்நிலை'' மக்களோடு உணவருந்தி உறவாடுவது மிக இழிந்த செயலாகக் கருதப்பட்டது.

எனவே சமயத்தில் மிகுந்த பிடிப்புடைய பரிசேயர்கள் இயேசுவிடம் குற்றம் காண்கிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் எல்லா மனிதரும் நலமடைய வேண்டும் என்பதற்காகத் தானே இவ்வுலகிற்கு வந்தார். எனவே, மனிதரிடையே தாழ்ந்தவர் உயர்ந்தவர் என அவர் வேறுபாடு காட்டவில்லை. கடவுள் வாக்களிக்கின்ற இறுதிக்காலப் பெருவிருந்தில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு என்னும் உண்மையை முன்னுணர்த்துவதுபோல இயேசு வேறுபாடின்றி மக்களோடு கலந்து உறவாடினார்; அவர்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் (காண்க: மத் 14:32-39; 22:1-14; 26:26-30). வெறுமனே உணவு உண்பது மட்டுமல்ல இயேசுவின் நோக்கம். விருந்துகளில் கலந்த அவர் மக்களுக்குக் குணமளிக்கவும் செய்தார் (காண்க: மத் 9:12); பாவ மன்னிப்பும் வழங்கினார் (மத் 9:13). ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி (காண்க: ஓசே 6:6), இயேசு கடவுளின் இரக்கமும் பரிவும் பலிகளை விட மேலானவை என்றுரைத்தார் (மத் 9:13). இயேசு நிறுவ வந்த கடவுளாட்சியில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு. குறிப்பாக, யார்யார் நீதி நிலைநாட்டுவதில் வேட்கை கொண்டுள்ளனரோ அவர்கள் இயேசு வழங்கும் கொடையை எளிதில் கண்டுகொள்வார்கள் (மத் 5:6). மாறாக, தங்களையே நேர்மையாளர்கள் என்று கருதி, பிறரை இழிவாக நோக்குவோர் கடவுளாட்சியில் புகுவதற்கு வழங்கப்படும் அழைப்பை ஏற்க மனமுவந்து முன்வரமாட்டார்கள் (மத் 9:13). மனிதரிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்காத இயேசுவைப் போல அவருடைய சீடராகிய நாமும் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நாடி வந்து உம் அன்பையும் இரக்கத்தையும் நாங்கள் பெற்று அனுபவிக்க எங்களுக்கு அருள்தாரும்.