யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் திங்கட்கிழமை
2022-06-27
முதல் வாசகம்

ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 2: 6-10, 13-16

ஆண்டவர் கூறுவது இதுவே: ``இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்; மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள். நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்; மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்து விட்டேன்; மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன். வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்பமுடியாது; வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்; வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது. வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான், விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது. அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன் கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்.
திருப்பாடல் 50: 16-17. 18-19. 20-21. 22-23

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு. 19 உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. பல்லவி

20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள். 21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். பல்லவி

22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ``போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ``ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம் !

நேற்று லுhக்க நற்செய்தியில் வாசித்த அதே பகுதியை இன்று மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசிக்கிறோம். தன்னைப் பின்பற்ற விரும்பும் இளைஞனுக்கு இயேசு கொடுக்கும் அறிவுரை, ‘இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’. உண்மையில், அந்த இளைஞன் இயேசுவிடம் வேண்டுவது, தந்தை இறக்கும் வரையில் அவரைப் பராமரித்துவிட்டு, அதன்பின் இயேசுவைப் பின்தொடர அனுமதி. ஆனால், இயேசுவின் பார்வை வேறாக இருக்கிறது. ஏன் அழைத்தலை ஏற்பதை ஒத்தி வைக்கவேண்டாம். நாள் ஆக ஆக, எண்ணங்கள் மாறலாமே? ஏற்றி வைத்த அழைத்தல் என்னும் அகல் விளக்கு அணைந்துவிடலாமே? எனவேதான், அழைத்தலை உடனே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. நமது குடும்பங்களில், பங்குகளில் இளையோர் அழைத்தலில் ஆர்வம் காட்டினால் அவர்களை உடனே ஊக்குவிப்போம். காலம் தாழ்த்தும்போது, அழைத்தலை இழக்க நேரிடலாம்.

மன்றாட்டு:

இயேசுவே, அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய இளையோருக்;காக வேண்டுகிறோம். உமது விருப்பத்திற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் இளையோரைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பண வாழ்வை அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.