யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-06-21
முதல் வாசகம்

என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் எருசலேமைப் பாதுகாத்து விடுவிப்பேன்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11,14-21, 31-35, 36

அந்நாள்களில் அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படை திரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று, எசேக்கி யாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி, “யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: ‘எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது’ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்து விடாதே. இதோ! அசீரிய மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?'' எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார். மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: “ கெருபுகள் மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே! நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக! ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்! அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.” அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனுக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள். ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்! ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழைய மாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்ப மாட்டான். அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர். இந்நகரை நான் பாதுகாப்பேன்; என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.” அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர். எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
திருப்பாடல்48: 1-2. 2-3. 9-10

ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2ய தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. பல்லவி

2b மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். பல்லவி

9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். 10 கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும். ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு சீடரை நோக்கி, 'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:31)

கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். அப்போது அவர்கள் சந்திக்கப் போகின்ற எதிர்ப்புகள் பல உண்டு எனவும் இயேசு கூறுகிறார். ஆனால் எந்த எதிர்ப்பைக் கண்டும் சீடர்கள் அஞ்ச வேண்டியதில்லை. மூன்று முறை இயேசு இவ்வாறு தம் சீடர்களுக்கு ஊக்கமூட்டுகிறார் (காண்க: மத் 10:26,28,31). சீடர்கள் நற்செய்திப் பணியில் ஈடுபடும்போது அவர்களைத் தரக்குறைவாகப் பேசுகின்ற மனிதரைக் கண்டு ''அஞ்ச வேண்டாம். ஏனெனில் உண்மை ஒருநாள் வெளிப்படத்தான் செய்யும். அப்போது சீடர் கடவுளின் வல்லமையால் உண்மையையே அறிவித்தனர் என்பது எல்லாருக்கும் தெரியவரும்'' (காண்க: மத் 10:25-26). இயேசு மக்களுக்கு வழங்கிய செய்தி ஒளிவுமறைவாக, காதோடு காதாய் ஊதப்பட வேண்டிய இரகசியச் செய்தி அல்ல. மாறாக, அது எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக அறிவித்து முழங்கப்பட வேண்டிய நல்ல செய்தி (மத் 10:27). இவ்வாறு சீடர்கள் துணிந்து செயலாற்றும்போது அவர்களைத் துன்புறுத்தவும், ஏன் கொன்றுபோடவும் தயங்காதோர் இருப்பார்கள். ஆனால் அவர்களால் சீடர்களின் உடலைத்தான் சிதைக்க முடியுமே ஒழிய அவர்களது ஆன்மாவை, உள்ளார்ந்த நம்பிக்கையைச் சிதைக்க இயலாது. எனவே, தங்களை எதிர்த்துநின்று, கொலைசெய்யவும் தயங்காதவர்களைக் கண்டு சீடர்கள் ''அஞ்ச வேண்டாம்'' என இயேசு கூறுகிறார் (மத் 10:28).

நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்படுகின்ற சீடர்களைக் கடவுள் அன்போடு பாதுகாத்துப் பராமரிப்பார் என்பதையும் இயேசு உணர்த்துகிறார். கடவுளின் பராமரிப்பு எத்தகையது என விளக்க இயேசு ஒரு சிறு உவமை கூறுகிறார். அதாவது, வானத்தில் பறக்கின்ற சிட்டுக் குருவி யாதொரு கவலையுமின்றி சுதந்திரமாகப் பறந்து மகிழ்வதை யாரும் காணலாம். அக்குருவிகளும் கடவுளின் படைப்புகளே. அவை கடவுள் படைத்த இயற்கைக்கு எழிலூட்டுகின்றன. சாதாரண குருவிகளுக்கும் கூட கடவுள் உணவளித்துக் காக்கிறார் என்றால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரை அவர் அன்போடும் கரிசனையோடும் பாதுகாக்க மாட்டாரா? கடவுளின் அன்பு பற்றிப் பிறருக்கு எடுத்துக் கூறி அவ்வன்பை மனமுவந்து பகிர்ந்துகொள்ளும் சீடர் மட்டில் கடவுள் அக்கறையின்றி இருப்பாரா? இதனால்தான் இயேசு சீடர்களிடம், ''சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்'' எனக் கூறுகிறார் (மத் 10:31). இன்று கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்ந்து பணிசெய்ய அழைக்கப்படுகின்ற நம்மையும் பார்த்து இயேசு ''அஞ்சாதீர்கள்'' எனக் கூறி ஊக்கமூட்டுகிறார். கடவுளையும் கடவுளாட்சியை அறிவிக்க நம்மை அனுப்புகின்ற இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்று, உறுதியுள்ள நெஞ்சினராய் நற்செய்தியை முழங்கும்போது எந்த எதிர்ப்பைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. அப்போது, ''அஞ்சாதிருங்கள்'' என இயேசு கூறுகின்ற ஊக்க மொழி நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நற்செய்தியை அச்சமின்றி முழங்கிட அருள்தாரும்.