யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 11வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-06-17




முதல் வாசகம்

அனைவரும் கைதட்டி, �அரசர் நீடுழி வாழ்க!� என்று முழங்கினர்
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 9-18, 20

அந்நாள்களில் அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரச குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள். அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலை மறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள். ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார். குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்தையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர். அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர். பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து, அவனுக்கு முடி சூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி �அரசர் நீடூழி வாழ்க!� என்று முழங்கினர். மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள். மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத்தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, �சதி! சதி!� என்று கூக்குரலிட்டாள். அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்ளை நோக்கி, �படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்� என்று கட்டளையிட்டார். �அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது� என்றும் கூறியிருந்தார். எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள். பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உடன்படிக்கை செய்து வைத்தார். பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார். நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாக்க விரும்பினார்.
திருப்பாடல் 132: 11. 12. 13-14. 17-18

11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: "உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். பல்லவி

12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும் நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்." பல்லவி

13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். 14 "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். பல்லவி

17 இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஓர் ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன். 18 அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்." பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

செல்வமும், உள்ளமும் !

உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்;” என்னும் ஆண்டவரின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். நமது மனம் நாம் விரும்பும் நபரையோ, அல்லது பொருளையோ, அல்லது இடத்தையோ எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் பழக்கம் கொண்டது. ஓரளவு தன்னுணர்வு கொண்ட அனைவரும் இதை உணர்ந்திருப்பர். நமது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, ஒரே சீராக வைத்திருப்பதையே யோகா அல்லது தியானம் என்கின்றனர். நமது மனம் இறைவனையே எண்ணிக்கொண்டிருந்தால், அவரே நமது செல்வம். நமது மனம் வேறு ஒரு மனிதரையோ, அல்லது பொருளையோ எண்ணிக்கொண்டிருந்தால் அவர் அல்லது அது நமது செல்வமாக மாறிவிடுகிறது. திருப்பாடல் 63ல் படுக்கையிலும் உம்மை நினைத்திருப்பேன். இரவுகளில் உம்மை சிந்திப்பேன்” என்று நாம் வாசிக்கிறோம். இறைவனையே தனது மிகப்பெரும் செல்வமாகக் கொண்ட ஒரு மனிதரின் உணர்வுகளின் வெளிப்பாடே இது. எனவே, நமது செல்வம் எது என்று எண்ணிப் பார்த்து, இறைவனையே நமது ஒப்பற்ற செல்வமாக மாற்றிக்கொள்வோம்.

மன்றாட்டு:

ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் உள்ளம் எப்போதும் உம்மையே பற்றிக்கொண்டு வாழும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.