யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 11வது வாரம் திங்கட்கிழமை
2022-06-13
முதல் வாசகம்

நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16

அந்நாள்களில் இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், �உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்� என்றான். அதற்கு நாபோத்து ஆகாபிடம், �என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!� என்றான். �என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்� என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான். அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, �நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?� என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், �நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். �உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்� என்றேன். அதற்கு அவன் �என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்� என்று சொல்லிவிட்டான்� என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, �இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்� என்றாள். எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், �நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, �நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்� என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்� என்று எழுதியிருந்தாள். நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, �நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்� என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர். பிறகு அவர்கள், ``நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்� என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, �நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்� என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
திருப்பாடல்5: 1-2. 4-6

1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும். 2ய என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். பல்லவி

4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5ய ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார். பல்லவி

5b தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)

மனிதர் தம் சொந்த முயற்சியால் கடவுளை அடைய முடியாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைத் தேடிச் செல்கின்ற மனிதர் கடவுளைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான ஆவலை நம் உள்ளத்தில் பதித்தவரே கடவுள்தாம். தம்மை மக்கள் தேடி வர வேண்டும் என்பது கடவுளின் திருவுளம் என்றால் அத்தேடலை நிறைவு செய்பவரும் கடவுளே. எனவேதான் கடவுள் நம்மை முதலில் அன்புசெய்தார் (காண்க: 1 யோவா 4:19 - ''அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்''). இந்த அன்பு எல்லையற்றது; நிகரற்றது. ஆனால், மனிதர் கடவுள்மட்டில் காட்டுகின்ற அன்பு எப்போதுமே குறைவுள்ளதுதான். அந்த அன்பு நம்மிடமிருந்து எழவேண்டும் என்றால் அதற்கு முதல் படியாக அமைவது கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்புதான். எனவேதான் கடவுள் நம்மை ஈர்க்கிறார் என இயேசு கூறுகிறார் (காண்க: யோவா 6:44). காந்தம் இரும்பை ஈர்க்கும்போது இரும்பு காந்தத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். அதுபோல, கடவுள் நம்மை ஈர்ப்பதால் நாம் அவரில் இணைகிறோம்; அந்த அன்பில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே கடவுளை அன்புசெய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குபவர் கடவுளே எனலாம்.

இவ்வாறு கடவுளால் ஈர்க்கப்பட்டு அவருடைய அன்புப் பிணைப்பில் மகிழ்ச்சியடைகின்ற நாம் கடவுளிடமிருந்து தலைசிறந்த ஒரு கொடையைப் பெற்றுக்கொள்கின்றோம். இதை நற்செய்தி நூல்கள் பல சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் சொல்கின்றன. கடவுள் நமக்கு வழங்குகின்ற கொடை யாது? இறையாட்சியில் நாம் பங்குபெறக் கடவுள் நம்மை அழைக்கிறார்; கடவுள் நமக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றார்; நிலைவாழ்வைக் கடவுள் நமக்குத் தருகிறார். இவ்வாறு கடவுளின் கொடையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். இயேசு கடவுளிடமிருந்து வந்து நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, மீண்டும் கடவுளின் அரசில் மாட்சிமை பெற்றதுபோல நாமும் இயேசுவின் மீட்புச் செயல் வழியாகக் கடவுளின் ஆட்சியில் நிறைவாகப் பங்கேற்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். இது கடவுள் நமக்கு வழங்கும் கொடையேயன்றி, நாமாக தேடிக்கொள்கின்ற செல்வம் அல்ல. கடவுள் வழங்குகின்ற கொடை நமக்கு நிலைவாழ்வாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.