யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 7வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-06-03

புனித நோபேட்




முதல் வாசகம்

இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25: 13-21

அந்நாள்களில் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்: ``பெலிக்சு கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து, `குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப்பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல' என்று கூறினேன். எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறு நாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார். இக்கருத்துச்சிக்கல்களைப்பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப் போய், ``நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவைபற்றி விசாரிக்கப்பட விரும்புகிறீரா?'' எனக் கேட்டேன். பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும்வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்
திருப்பாடல் 103: 1-2. 11-12. 19-20

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது. 20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-1

என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய். +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19 தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆடுகளை மேய்'' என்றார். மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார். `உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ``ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், ``என்னைப் பின் தொடர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தூய தந்தையே,...நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்' என்றார்'' (யோவான் 17:18)

யோவான் நற்செய்தியில் இயேசு கடவுளை நோக்கி எழுப்பிய நீண்டதொரு மன்றாட்டு உள்ளது (யோவா 17:1-28). அதில் இயேசு கடவுளைப் போற்றுகிறார்; சிறப்பாகத் தம் சீடர்களுக்காக இறைவனை மன்றாடுகிறார். தந்தையோடு தமக்கு இருக்கின்ற ஒன்றிப்பு சீடர்கள் நடுவிலும் நிலவிட வேண்டும் என இயேசு வேண்டுகிறார் (யோவா 17:11ஆ). உலகை விட்டுப் பிரிந்து செல்கின்ற வேளையிலும் இயேசு உலகின் மீட்புக்காக வேண்டுகிறார். உலகத்தை மீட்பதற்காகவே அவர் இவ்வுலகிற்குத் தந்தையால் அனுப்பப்பட்டார். தம் பணியை நிறைவேற்றிவிட்டுத் தந்தையிடம் செல்கின்ற இயேசு அப்பணியைத் தொடர்வதற்கான பொறுப்பைத் தம் சீடர்களிடம் ஒப்படைக்கிறார். இயேசு இவ்வுலகில் இருந்து நற்செய்தியை அறிவித்ததுபோல அவருடைய சீடர்களும் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும். அப்பணியை ஆற்றும்போது அவர்களுக்குத் துணையாக இயேசுவும் அவர் வழங்குகின்ற தூய ஆவியும் இருப்பார்கள். சீடர்கள் ஆற்ற வேண்டிய பணி இயேசு ஆற்றிய பணியே என்பதை வலியுறுத்தும் விதத்தில் இயேசு, ''தந்தையே, நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்'' என்று கூறி மன்றாடுகின்றார்.

இந்த மன்றாட்டில் துலங்குகின்ற முக்கிய கருத்துக்கள் இரண்டு. முதலில் இயேசு தந்தையால் அனுப்பப்படுகிறார். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்களை இறைவாழ்வில் பங்குகொள்ளச் செய்வதே இயேசு ஆற்றவந்த பணியின் நோக்கம். இரண்டாவது, இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். இந்த இரு ''அனுப்புதல்களும்'' ஒன்றோடொன்று இணைபிரியாமல் பிணைந்துள்ளதை நாம் கருத வேண்டும். இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்கின்ற சீடர் குழு தன் சொந்தப் பெயரால் பணி செய்வதில்லை; மாறாக, தன்னை உருவாக்கிய இயேசுவின் பெயராலேயே பணி செய்கிறது. திருச்சபை வழியாக இயேசுவே அப்பணியை ஆற்றுகிறார். எனவே, நாம் ஆற்றுகின்ற நற்செய்திப் பணி வெற்றியடைவதற்கு வழிகாட்டுபவர் இயேசுவே. நாம் கடவுளின் கைகளில் அவருடைய கருவிகளாக இருந்து பணியாற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் உம் திருமகன் வழியாக எங்களுக்கு அளித்த பணியை நாங்கள் மகிழ்ச்சியோடு ஆற்றிட அருள்தாரும்.