யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 6வது வாரம் சனிக்கிழமை
2022-05-28




முதல் வாசகம்

இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, `இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.
திருப்பாடல் 47: 1-2. 7-8. 9

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது `உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்றார்'' (யோவான் 14:27)

இயேசு தம்மோடு பந்தியமர்ந்திருக்கின்ற தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களிக்கிறார். வழக்கமாகக் கூறப்படுகிற வாழ்த்துச் சொல் ''அமைதி!'' என்பதாகும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய போதும் ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார். இவ்வாறு இயேசு வாக்களிக்கின்ற அமைதி உலகம் தருகின்ற அமைதி அல்ல. அதாவது, கடவுளிடமிருந்து வருகின்ற அமைதி நம்மைக் கடவுளோடு ஒன்றிணைக்கின்ற சக்தி கொண்டது. கடவுளே நம் குற்றங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்பதால் நாம் கடவுளின் அமைதியில் பங்கேற்கிறோம். இந்த அமைதியை உலகமோ உலகத்திலுள்ள எந்த சக்தியோ நமக்குத் தர இயலாது. எனவே, இயேசு வாக்களிக்கின்ற அமைதி நம்மைக் கடவுளோடு உறவாக்குகின்ற அதே வேளையில் நம்மை அடுத்திருப்போரோடும் நாம் நல்லுறவில் வாழ்ந்திட நமக்கு வழியாகிறது.

இயேசு கொணர்கின்ற அமைதி சொல்லளவில் நின்றுவிடாது. மாறாக, கடவுளின் வல்லமையால் அமைதி செயலாக்கப்படும். இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, ''அமைதியாயிரு!'' என்றதும் ''மிகுந்த அமைதி'' உண்டாயிற்று (காண்க: மாற் 4:39). ஆனால் கடவுள் அமைதி கொணர்வது இயற்கையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு நின்றுவிடுவதில்லை. அது மனித உள்ளங்களைப் பண்படுத்தி எல்லா மனிதரும் அன்பும் நீதியும் நிறைந்த உலகை உருவாக்கிட அவர்களுக்கு ஊக்கம் தருகின்ற சக்தியாகவும் செயல்படுகிறது. எனவே, அமைதி என்பது போர் நிகழா நிலை மட்டுமல்ல, மாறாக, கடவுள் உலகுக்கென்று வகுத்த திட்டத்தை மனிதர் நன்மனத்தோடு இணைந்து செயல்படுத்துவதன் பயனாகவே அமைதி தோன்றும். இத்தகைய அமைதி கடவுளின் கொடையாக நமக்கு அளிக்கப்படும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் இக்கொடையை நாம் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும். அது நிலையாக நம்மிடையே நிலவிட நாம் உழைக்கவும் வேண்டும். ஆக, கடவுள் வாக்களிக்கின்ற அமைதி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் உலகிலும் நிலவித் தழைத்திட வேண்டும் என்றால் கடவுளின் அருளோடு நாமும் ஒத்துழைப்பது தேவை.

மன்றாட்டு:

இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் இவ்வுலகிற்கும் அளித்தருளும்.