யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 5வது வாரம் சனிக்கிழமை
2022-05-21




முதல் வாசகம்

மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

அந்நாள்களில் பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர். அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன. பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர். பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, ``நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்'' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்
திருப்பாடல் 100: 1-2. 3. 5

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி br>
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி br>
5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி br>


நற்செய்திக்கு முன் வசனம்

! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்;ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்றார்'' (யோவான் 15:19-20)

இயேசு தமக்கும் தம்மை அனுப்பிய தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு பற்றிப் பேசுகிறார். பிறகு தம்மையும் தம்மை அனுப்பியவரையும் அறிந்து அன்புசெய்பவர்களும் அந்த உறவில் பங்கேற்பது பற்றிப் பேசுகிறார். இவ்வாறு தந்தை - இயேசு - சீடர்குழு ஆகிய மூவருக்கும் இடையே ஆழ்ந்த அன்புறவு நிலவுகிறது. இவ்வுறவு பற்றிப் பேசிய பிறகு இயேசு ''உலகம்'' சீடர்களை வெறுக்கும் என்பதையும் அறிவிக்கிறார். இங்கே உலகம் எனக் குறிக்கப்படுவது கடவுள் அன்போடு படைத்த எழில்மிகு இயற்கை உலகமோ, அதில் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டு வாழ்கின்ற மனிதரோ அல்ல. மாறாக, ''உலகம்'' என்னும் சொல்லுக்கு யோவான் நற்செய்தியில் இன்னொரு எதிர்மறையான பொருளும் உண்டு. அதாவது, இயேசு கடவுளிடமிருந்து வருகிறார் என்னும் உண்மையை ஏற்க மறுக்கின்ற சக்திகளையே ''உலகம்'' என யோவான் குறிப்பிடுகிறார். இந்த ''உலகம்'' கடவுளின் திட்டத்தை ஏற்க மறுக்கிறது. கடவுளையும் அவரால் அனுப்பப்பட்டு நம்மை மீட்ட இயேசுவையும் ஏற்கத் தயங்குகிறது.

கடவுளின் திட்டத்தை எதிர்க்கிற ''உலகம்'' இயேசுவின் சீடர்களையும் எதிர்த்து நிற்கும். ஆனால் இயேசு தம் சீடர்களை நோக்கி ''அஞ்சாதீர்கள்'' என ஆறுதல் மொழி கூறுகின்றார். தலைவராகிய இயேசுவையே எதிர்த்தவர்கள் இயேசுவின் சீடர்களையும் எதிர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறி இயேசு தம் சீடருக்கு ஊக்கமூட்டுகிறார். அன்று சீடர்களுக்குக் கூறப்பட்டது இன்றைய திருச்சபைக்கும் பொருந்தும். இயேசுவை நம்புவோர் பல தருணங்களில் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தம்மை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு கிறிஸ்தவ நம்பிக்கையுடையோர் அஞ்ச வேண்டியதில்லை. அவர்களுக்குத் துணையாக இயேசுவும் அவர் அனுப்புகின்ற தூய ஆவியும் இருப்பார்கள். எனவே நாம் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை.

மன்றாட்டு:

இறைவா, எங்களை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு நாங்கள் துவண்டுவிடாதிருக்க அருள்தாரும்.