யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 5வது வாரம் திங்கட்கிழமை
2022-05-16




முதல் வாசகம்

பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18

அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், ``நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்'' என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், ``தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன'' என்று குரலெழுப்பிக் கூறினர். அவர்கள் பர்னபாவைச் `சேயுசு' என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை `எர்மசு' என்றும் அழைத்தார்கள். நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார். இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: ``மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.'' இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.
திருப்பாடல் 115: 1-2. 3-4. 15-16

எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும். 2 `அவர்களுடைய கடவுள் எங்கே' எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? பல்லவி

3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! பல்லவி

15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே. 16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.'' யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம், ``ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ``என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

``நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்று சொன்ன இயேசுவிடம் இன்னும் விளக்கம் கேட்கன்றனர் திருத்தூதர்கள். நம் வாழ்வின் இலட்சியம் தந்தை இறைவனின் திருப் பாதம் அடைவது. தந்தையின்; திரு உளத்தை வாழ்வதே உண்மை வாழ்வு. தந்தையின் திருஉளம் காட்டும் பாதையில் வாழ்வதே நம் வாழ்க்கைப் பாதை. இதையே இயேசு தந்தை இறைவனோடு உள்ள உறவில் காண்கிறார். அதையே வெளிப்படுத்துகிறார். ஆகவே இறை வழியில் உண்மையின் பாதையில் நடக்கும் மனிதன் தன் வாழ்வைக் கண்டடைகிறான்; இயேசுவைக் காண்கிறான். இயேசுவின் வழியாகத் தந்தை இறைவனையும் கண்டு அனுபவிக்கிறான்.இத்தகையோர் வாழ்வில் எந்த குறையும் இருக்காது. இயேசு தந்தையின் திரு உளத்தை நிறைவேற்றி, அவரையே தன் வாழ்வாக, வழியாக, உண்மையாக்கொண்டு வாழ்ந்ததால், நானும் தந்தையும் ஒன்றே என்று தந்தை இறைவனோடு தனக்குள்ள உறவினை உலகுக்குச் சொல்கிறார்.

சொல்வதை நம்பாவிடில் என் செயல்களின் பொருட்டாகிலும் நம்புங்கள். தான் வாழ்ந்த வாழ்க்கை தந்தை இறைவனை வெளிப்படுத்தும் சாட்சியம். இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளும் நாமும், அறிய பெரிய காரயங்களைச் சாதிக்க முடியும். நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்று சொன்ன இயேசுவின் பாதையில் நம் வாழ்க்யை அமைத்துக்கொண்டால் பெரியவற்றை உங்கள் வாழ்வில் செய்வீர்கள். "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்".(யோவான் 14:12) இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் வழிநடத்தல் இருப்பதால் நாங்கள் தவறிச் செல்லாதிருக்க அருள்தாரும்.