யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-05-08

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13:14.43-52,திருப்பாடல் 100:1-3,5,திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 7:9, 14-17,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:27-30)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கடவுளுக்குரியவர்களே, நல்லாயராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறில் சிறப்பிக்கப்படும் இன்றைய திருவழிபாடு, இயேசுவைப் பின்தொடர்ந்து, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்கும் ஆடுகளாக வாழும்போது நாம் அழிவுக்குள்ளாக மாட்டோம். நமக்காக உயிரைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நம்மை எதுவும் பிரித்து விடாத வகையில், அவரது பாதுகாப்பில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவருக்கு உண்மையுள்ள ஆடுகளாக வாழ்ந்து, நாம் கடவுளைச் சார்ந்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்ற வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13:14.43-52

அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். 43 தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர். 44 அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45 மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். 46 பவுலும் பர்னபாவும் துணிவுடன், "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47 ஏனென்றால், "உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்" என்று ஆண்;டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்" என்று எடுத்துக் கூறினார்கள். 48 இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49 அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50 ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51 அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். 52 சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
திருப்பாடல் 100:1-3,5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! 3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி
5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.பல்லவி

இரண்டாம் வாசகம்

"இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்
திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 7:9, 14-17

இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்கள்.14 நான் அவரிடம், "என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது; "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். 15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். 16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. 17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூயஅp;ற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:27-30

27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உயிர் அளிப்பவரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் ஒளியாம் இறைவா,

உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும், சமயங்களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மனமாற்றத்தின் நாயகனே எம் இறைவா!

இறை அழைத்தலின் மேன்மையை, அனைத்து மாந்தரும் உணர்ந்து, சுயநலம் கருதாமல் குருத்துவத்தின் மேன்மையைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தித் திருச்சபைக்குப் பணிச் செய்திடத் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டிய அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

நல்ல ஆயன் நானே !

உலகின் மிகப் பிரபலமான திருப்பாடல் என்று அழைக்கப்படும் திருப்பாடல் 23.ஆண்டவரே என் ஆயர்” என்று தொடங்குகிறது. இறைவனை ஆயனாக, பராமரிப்பவராக, வழிநடத்துபவராக முற்காலத்திலிருந்தே அழைத்து மகிழ்கிறது மனித இனம். ஓர் ஆயனின் பணிகள் பல: 1. வன விலங்குகளிலிருந்து ஆடுகளைப் பாதுகாக்கிறான்.

2. இலை, தழைகளைத் தந்து பராமரிக்கிறான்.

3. நீர் நிலைகளுக்கு அழைத்துச் சென்று தாகம் தணிக்கிறான்.

4. காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் குணமாக்குகிறான்.

இயேசு நமது நல்ல ஆயனாக இருந்து இந்தப் பணிகளை நமக்குச் செய்கிறார். பாதுகாக்கிறார், பராமரிக்கிறார், வழிநடத்துகிறார், குணமாக்குகிறார். நல்ல ஆயனுக்கு நன்றி கூறுவோம். நல்ல ஆடுகளாய் வாழ்வோம்.

மன்றாட்டு:

நல்ல ஆயனான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நன்றி செலுத்துகிறோம். உமது அடைக்கலத்தில் நாங்கள் என்றும் வாழும் வரம் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.