யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
2022-03-20

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 3:1-8,13-15,திபா 103: 1-2. 3-4. 6-7, 8,11,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 10:1-6,10-12,+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஆண்டவருக்கு உரியவர்களே, தூயவராம் ஆண்டவர் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் முன்னிலையில் தூயவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. வரலாற்றை வழிநடத்தும் கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது அழைத்தலின் மேன்மையை உணர அழைக்கப்படுகிறோம். தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், தங்களை மாசற்ற பலிப்பொருளாக அர்ப்பணிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். நாம் பாவிகள் என்பதை உணர்ந்து மனம் மாறும் பொழுது ஆண்டவரின் மீட்பை பெற்றுக்கொள்வோம். "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்" என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, தூய வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்;
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 3:1-8,13-15

அந்நாட்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார். அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே ' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார். அவர், "இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார். மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது ஆண்டவர் கூறியது: "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்: ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்." மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன? ' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே ' என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே ' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் ' என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!"

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திபா 103: 1-2. 3-4. 6-7, 8,11

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. -பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 10:1-6,10-12

சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில், சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்: எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்: நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி: இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தூய்மையின் நிறைவாம் இறைவா,

திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.

நீர் எங்களுக்குத் தந்திருக்கிற கொடைகள், ஆற்றல்கள், திறமைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறுகிறோம். இந்தத் திறமைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், பிறருக்கும் கனிகளை வழங்கும் அருளை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் எங்கள் வாழ்வில் மாற்றங்களை அருளும். நற்கனி கொடுப்பவர்களாக எங்களை மாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வின் நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

நல் ஆயனே! எம் இறைவா!

இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரை பாதுகாத்து, அவர்கள் உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பிக்க உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் மக்களைக் கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், இந்நோய் முற்றிலும் நீங்கிடவும், இத்தவக்காலத்தில் உம் மக்கள் அனைவரும் ஆலயம் சென்று, ஒன்றிணைந்துச் செபிக்கவும் தேவையான அருளை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும், பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும், அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

ரஷ்ய நாட்டிற்கும், உக்ரைன் நாட்டிற்கும் நடக்கும் இந்த யுத்தம் நிறைவு பெற வேண்டுமென்று உம்மிடம் தாழ்ந்து மன்றாடுகின்றோம். தகப்பனே மக்களின் துயரினைக் கண்ணோக்கியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இதயமற்ற செல்வர் !

லூக்க நற்செய்திக்கு மட்டுமே உரிய அருமையான ஓர் உவமை செல்வரும், லாசரும். இந்த உவமையில் இறந்ததும் எரிநரகத்திற்குச் செல்லும் செல்வரின் வாழ்க்கை நிலையைப் பற்றி ஒரே வரியில் சுருங்கக் கூறிவிடுகிறார் ஆண்டவர் இயேசு. “அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்”. ஆம், அந்த செல்வர் செய்த ஒரே தவறு, தனது வீட்டு வாசலில் துன்புற்றுக்கொண்டிருந்த லாசரைப் பற்றிக் கவலைப்படாமல், தான் மட்டும் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்ததுதான். உலக இன்பங்களைப் பற்றிய ஆண்டவரின் போதனை தெளிவாக இருக்கிறது. உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற உலக இன்பங்கள் அனைத்தும் நல்லவையே. ஏனென்றால், இறைவனால் படைக்கப்பட்டவை. ஆனால், அந்த இன்பங்களைத் தன்னலத்தோடு அனுபவிப்பது தவறு. அதிலேயே வாழ்வைக் கழிப்பதும் தவறு. உணவுக்காகவே வயிறு. வயிற்றுக்காகவே உணவு என்றிருந்தால், இரண்டையும் ஆண்டவர் அழித்துவிடுவார் (1 கொரி 6:13) என்றார் பவுலடியார். உண்மைதான், இந்த செல்வர் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்ததால், ஆண்டவர் அவரை எரிநரகத்திற்குள்ளாக்கினார்.

மன்றாட்டு:

நீதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இவ்வுலகில் இன்பம் மட்டுமே அனுபவித்தவருக்கு மறுவுலகில் விண்ணக பேரின்பத்தையும், துன்பங்களை மட்டுமே அனுபவித்தவர்களுக்கு மறுவுலகில் நிறைமகிழ்வு உண்டு என்று போதித்தீரே, உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் அருகில் வாழும் தேவை நிறைந்தோரை அன்பு செய்து வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.